2026-ம் ஆண்டுக்குள் மாவோயிஸ்டுகள் அனைவரையும் கூண்டோடு அழித்தே தீருவோம்: அமித்ஷா

நாட்டில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுக்கு எதிரான இறுதி யுத்தம் இரக்கமற்ற வியூகத்துடன் தொடங்கும் காலம் வந்துவிட்டது; இந்தியாவில் 2026-ம் ஆண்டுக்குள் மாவோயிஸ்டுகள் அனைவரையும் கூண்டோடு அழித்தே தீருவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துளார்.

மாவோயிசம் சித்தாந்தம் மூலம் இந்தியாவில் இடதுசாரி அரசாங்கத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஆயுதப் புரட்சியை நடத்துகின்றனர் மாவோயிஸ்டுகள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒரு காலத்தில் மாவோயிஸ்டுகளின் கை ஓங்கி இருந்தது. ஆனால் தற்போது சத்தீஸ்கர், ஒடிஷா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் சொற்ப எண்ணிக்கையில்தான் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது.

இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மாவோயிஸ்டுகள் பாதிப்பு அதிகம் இருக்கும் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஷா, மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணுதியோ சாய் பங்கேற்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாவது:-

நாட்டில் மாவோயிஸ்டுகளின் வன்முறைகளால் 17,000 பொதுமக்கள் பலியாகி உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் 50% அளவு குறைந்தும் விட்டது. 2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து மாவோயிஸ்டுகளை முற்றாக அழித்தொழிப்போம். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தைத் தொடங்கும் காலம் இது. இந்த இறுதி யுத்தத்தில் இரக்கமற்ற வியூகங்கள் அவசியமாகும். மாவோயிஸ்டுகளின் நிதி கட்டமைப்பை அமலாக்கத்துறை உள்ளிட்டவை ஏற்கனவே சிதைத்து நிர்மூலமாகிவிட்டன. மாவோயிச பயங்கரவாதத்தில் இருந்து 2026-க்குள் தேசத்தை விடுவித்துவிடலாம். ஆகையால் வன்முறையை கைவிட்டுவிட்டு மாவோயிஸ்டுகள் சரணடைய வேண்டும். மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இளைஞர்கள் இனி மாவோயிஸ்டுகள் பின்னால் செல்லமாட்டார்கள். இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.