அண்ணாமலையை லெப் அண்ட் ரைட் வாங்கும் வகையில் மீண்டும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடந்த கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவிற்கு எனக்கும் அழைப்பு வந்தது. அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம் தான் இருந்தது. மாநில அரசின் செயலாளர் பெயர் தான் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு நடத்தியதாக, முதலமைச்சர் கூறுகிறார். திமுக அரசை குற்றம்சாட்டினால், பாஜக மாநில தலைவர் என்னை குறைசொல்கிறார். மத்திய தலைவர்கள் வெளியிட்டால் தான் எம்.ஜி.ஆருக்கு புகழ் கிடைக்கும் என அண்ணாமலை கூறுகிறார். அவரின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது. அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை. அண்ணாமலை பிறப்பதற்கு முன்னாகவே எம்.ஜி.ஆர் தமிழ்நாடு முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். தனக்கென்று தனி முத்திரை பதித்தவர். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை பெற்றவர் என்று பெருமையாக சொல்லப்படுபவர். அப்போது உங்கள் தலைவர்கள் எந்தப் பதவியிலும் இல்லை.
திமுகவை போல பாஜகவும் இரட்டை வேடம் போடுகிறது. 10 ஆண்டுகளில் பாஜக ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை, கடன் சுமை தான் அதிகரித்துள்ளது. மத்தியில் ரூ.55 லட்சம் கோடியாக இருந்த கடன், 10 ஆண்டுகளில் 165 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. பொய்களை மட்டுமே பேசுபவர் தான், தமிழக பாஜக தலைவராக உள்ளார். அதிமுக ஆட்சியில் ஊழல் இருந்ததாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். அது எங்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட போது தெரியவில்லையா. அண்ணாமலைக்கு என்னை விமர்சிப்பதைத் தவிர வேறு என்ன வேலை. அவர் வேறு என்ன செய்திருக்கிறார். மைக்கை கண்டால் அவருக்கு வியாதி. உடனே பேசத் தொடங்கிவிடுவார்.
எல்லோரும் உழைத்து பதவிக்கு வந்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தார். அந்தக் கட்சியில் உழைத்த எத்தனையோ தலைவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. இவர் வேறு ஏதோ வழியில் பதவி பெற்றுள்ளார். அதை வைத்து இன்று தலை, கால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார். நான் கிளைச் செயலாளர் பதவியில் இருந்து 52 ஆண்டு காலம் உழைத்துதான் முதலமைச்சர், பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துள்ளேன். மக்களை பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவரின் ஒரே முதலீடு வாயும் நாக்கும் தான். தன்னை மட்டுமே விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்.” என்றார்.
அவரிடம் செய்தியாளர்கள் நடிகர் விஜயின் தவெக கட்சி கொடி பாடலில் அண்ணா, எம்.ஜி.ஆர் குறித்து குறிப்பிட்டிருப்பதை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “ஒரு அரசியல் கட்சி தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர்கள் முன் உதாரணமாக உள்ளனர். அந்த வகையில் விஜய் கட்சியின் கொடி பாடலில் எங்கள் தலைவர்கள் இடம் பெற்றிருப்பது அவர்களுக்கு கிடைத்த பெருமை. இந்தக் கட்சியை யாராலும் அழிக்க முடியவில்லை. அதிமுக தலைவர்கள் குறித்து பேசினால் தான் அரசியல் செய்ய முடியும் என்று நினைத்திருக்கலாம். அவர்கள் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவே இல்லை. அப்படி இருக்கும்போது கூட்டணி குறித்து எல்லாம் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்” என்றார்.