கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளதாவது:-
சக குடிமக்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக லட்சியங்களுக்கு நம்மை அர்ப்பணிக்க இந்த மகிழ்ச்சித் திருவிழா நம்மைத் தூண்டுகிறது. ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல் முழு மனிதகுலத்திற்கும் உத்வேகம் மற்றும் அறிவொளியின் நித்திய ஆதாரமாகும்.நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக உழைக்க உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி:
கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றியும், தீமைகளை முறியடிக்கவும் உறுதியேற்க வேண்டும். அறம் பிறழும்போது, நான் இவ்வுலகில் அவதரிப்பேன் என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப நம் கடன் அறத்தை வளர்ப்பதே என்ற உயரிய குறிக்கோளுடன் ஒன்றிணைந்து அனைவரும் வாழ வேண்டும். இந்த இனிய நாளில், நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, அனைவருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில் எனது உளமார்ந்த கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:
தனக்காக இல்லாமல், பிறருக்காக சாதாரண மக்களோடு மக்களாக வாழ்ந்து அனைத்து உயிர்கள் மீதும் கருணை மழை பெய்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளை “கோகுலாஷ்டமி” என்றும், “கிருஷ்ண ஜெயந்தி” என்றும் கொண்டாடும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:
நான் அனைத்து உயிர்களிடத்தும் சமமானவன், எனக்கு பகைவனுமில்லை, நண்பனுமில்லை என்று பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் எடுத்துரைத்த வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றிட இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம். ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய திருநாளில் தர்மம் செழிக்கவும், அறம் வளரவும், அனைவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கவும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வி.கே.சசிகலா:
மனிதகுலம் முறையாக வாழ்வதற்கு உரிய நெறிமுறைகளை, எந்த காலத்துக்கும் பொருந்தும் வகையிலான கருத்துகளுடன், ஞானரசமாம் பகவத் கீதையை இந்த உலகத்துக்கு உபதேசித்த பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணரின் திருவருளால் தீயவை அகன்று, நன்மை செழித்து அனைவரும் ஒற்றுமையோடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என ஸ்ரீ கிருஷ்ண பகவானை மனதார வேண்டுகிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.