உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த நடிகையும் பாஜக பிரமுகருமான நமீதாவை அதிகாரிகள் கோவிலுக்கு வெளியே நிற்க வைத்ததாகவும், என்ன ஜாதி என்ன மதம் என கேட்டு தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார் நமீதா.
தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நமீதா, விஜயகாந்த், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தவர். பல படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அவர் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்தார். தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அவர் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் அதுவும் கை கூடவில்லை. தொடர்ந்து பாஜகவில் இணைந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். மேலும் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமா இருந்து ஒதுங்கினாலும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சினிமா, அரசியல் மட்டுமல்லாமல் ஆன்மீகத்திலும் ஈடுபாடு கொண்டு, இந்தியாவின் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார் நமீதா.
இந்நிலையில் உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தபோது கோவில் அதிகாரிகளால், தங்கள் சாதி மதத்தை கேட்டு அவமானப்படுத்தப்பட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்திருக்கிறார் நமீதா. இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தானும் தனது கணவரும் வந்ததாகவும், அப்போது மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகித்தனர் தங்களை தடுத்து நிறுத்தியதாகவும் வீடியோவில் பரபரப்பு புகாரை கூறியிருக்கிறார். மேலும், நீங்கள் இந்து தான் என்பதற்கான சான்றுகளை வழங்கினால் தான் கோவிலுக்குள் அனுமதிப்போம் எனக் கூறி கோவிலுக்கு வெளியே நமீதாவையும் அவரது கணவரையும் நிறுத்தி வைத்ததாக புகார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் எங்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து விட்டனர். இந்தியா முழுவதும் தெரிந்த நடிகையாக இருக்கும் நான் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு கோவிலுக்கு சென்று வந்திருக்கிறேன். அப்படி இருக்கும்போது மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மட்டும் என்னை செல்ல விடாமல் எப்படி தடுக்கலாம்” என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியிருந்தார் நமீதா. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் நமிதாவுக்கு பாஜகவினரும் அவரது ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் அதிகாரிகள் இப்படித் தான் அராஜகம் செய்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அதில், நமீதாவின் புகார் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டு, அவர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.