பழனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் கல்வியைக் காவி மயமாக்கும் என விசிக எம்பி ரவிக்குமார் விமர்சித்திருந்தார். இந்நிலையில் லயோலா கல்லூரியில் ‘சர்ச்’ உள்ளது என்பது ரவிக்குமாருக்கு தெரியுமா? மதராஸாக்களில் இஸ்லாமிய மத போதனைகள் தான் கல்வியாக கற்றுக் கொடுக்கப்படுகிறது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று முன் தினம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது. மாநாட்டை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டில் ஆய்வு கட்டுரைகள் உள்ளிட்டவை சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், நிறைவு நாளில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் சில தீர்மானங்கள் கல்வியைக் காவி மயமாக்கும் வகையில் இருப்பதாக விசிக எம்பி ரவிக்குமார் விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில்,”பழனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்றும் இன்றும் (24-25) நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் இன்று 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள், 5ஆவது தீர்மானமாக: “முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது” எனவும்; 8 ஆவது தீர்மானமாக: “விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது” எனவும், 12 ஆவது தீர்மானமாக: “முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கல்வியை சமயச் சார்புடையதாக்குதல் என்னும் பாஜக அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை இது முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல. இந்து சமய அறநிலையத் துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது” என கூறியிருந்தார்.
இந்நிலையில், மதராஸாக்களில் இஸ்லாமிய மத போதனைகள் தான் கல்வியாக கற்றுக் கொடுக்கப்படுகிறது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
கல்வியைக் காவி மயமாகும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சியளிக்கின்றன; கல்வித்துறைக்குள் சமயத்தைக் கொண்டு வந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் கூறுகிறார். மதராஸாக்களில் இஸ்லாமிய மத போதனைகள் தான் கல்வியாக கற்றுக் கொடுக்கப்படுகிறது என்று ரவிக்குமாருக்கு தெரியுமா? அதை விமர்சிக்க ரவிகுமாருக்கு தைரியம் உள்ளதா? கிருஸ்துவ பரப்பாளர்கள் (Christian Missionaries) நடத்தும் பள்ளிகளில் பைபிள் குறிப்புக்கள் இடம் பெறுகின்றனவே, அது ரவிக்குமாருக்கு தெரியுமா? லயோலா கல்லூரியில் ‘சர்ச்’ உள்ளது என்பது ரவிக்குமாருக்கு தெரியுமா?
கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் தங்கள் கல்லூரிகளில் மத வழிபாடு நடத்தலாம், ஆனால், பெரும்பான்மை மக்கள் கல்வி பயிலும் கல்விசாலைகளில் இறைவழிபாடும், கந்தசஷ்டி கவசமும் பாராயணம் செய்வது கண்டத்துக்குரியதா? சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வதா? ஹிந்து சமயம் கல்வியை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, நாகரீகத்தை, ஒழுக்கத்தை, நேர்மையை, நீதியைத் தான் போதிக்கிறது என்பது ரவிக்குமாருக்கு தெரியாதது வியப்பில்லை. இப்படி தொடர்ந்து ஹிந்து மத நம்பிக்கைகளை விமர்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு தான் கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.