நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்!

யூடியூப் பிராங்க் மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ் நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். ஆனால், குடிப்பழக்கத்தால் தனது உடல்நிலை மோசமடைந்ததாகவும் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாகவும் பேட்டியளித்து வந்த பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு 9 மணிக்கு உயிரிழந்தது சினிமா ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிளாக்‌ஷீப் யூடியூப் சேனலின் பிராங்க் வீடியோ மூலமாக ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் பிஜிலி ரமேஷ். ஹிப்ஹாப் ஆதி நடித்த நட்பே துணை படத்தில் இவருக்கு நடிகராக நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், அமலாபால் நடித்த ஆடை மற்றும் ஜெயம் ரவி நடித்த கோமாளி, யாஷிகா ஆனந்த் நடித்த ஜாம்பி உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து கலக்கினார். குடித்துவிட்டு சாலையில் சென்ற பிஜிலி ரமேஷ் பிராங்க் செய்கிறோம் என பிடித்து கலாய்க்க தமிழ் சினிமாவுக்கு திடீரென ஒரு நடிகரே கிடைத்துவிட்டார். ஆனால், அதே குடி தற்போது அவரது வாழ்க்கையை பறித்துள்ளது.

குடிபோதை தனது வாழ்க்கையே மாற்றி விட்டது என்றும் யாரும் குடிக்காதீங்க என எழுந்துக் கூட நிற்க முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த பிஜிலி ரமேஷ் சமீபத்தில் சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு 9 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

ஒரு இடத்தில் நிற்க மாட்டேன், சும்மா சுத்திக்கிட்டே இருப்பேன். கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் நான் செய்த தவறுகள் அதிகம், அதிகம் குடித்ததன் விளைவாக தற்போது உடல் நலம் முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன். என்னைப் பார்த்தாவது அந்த மோசமான குடிப்பழக்கத்தை மற்றவர்கள் விட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என சமீபத்தில் அவர் அளித்த பேட்டியை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.