திமுக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து, தனக்கு விலக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து எடப்பாடி பழனிசாமி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடந்துமுடிந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பியை விமர்சித்து, எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். குறிப்பாக, “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார்? என்பதை நீங்கள் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்” என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். பழனிசாமி அரசியல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே எனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான கருத்துகளை தெரிவித்து, தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பதால், அவர்மீது நடவடிக்கை தேவை என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். அப்போது அவதூறு வழக்கில் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுப்பதாக எடப்பாடி பழனிசாமி நீதிபதியிடம் பதிலளித்தார்.. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் அளித்தார். அந்த மனுவில் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளதாவது:-
எனக்கு 70 வயது ஆகிவிட்டது.. மூத்த குடிமகன் மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ளேன்.. இப்போது தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளேன்.. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன்.. நீதித்துறையின் மீது நான் மிகுந்த மரியாதையும் கொண்டவன்.. உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொண்டு வருகிறேன்.. வழக்கை தாமதப்படுத்தும் நோக்கமோ, அல்லது நீடிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை.. எனவே நேரில் ஆஜராவதிலிருந்து இருந்து விலக்களிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்..
இதைடுத்து, அதிமுக தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அது சிறப்பு நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்று இங்கு மாற்றப்பட்டது. கடந்த மே 17ஆம் தேதி வழக்கை மதித்து நேரில் அதிமுக பொதுச் செயலாளர் ஆஜரானார். மறுபடியும் ஒருமுறை இந்த நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்ததால் சட்டத்தை கட்டி காப்பவர் என்பதால் இன்று நேரில் ஆஜரானார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதை அவதூறு என்கிறார் தயாநிதி மாறன்.. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படிதான் அதிமுக பொதுச்செயலாளர் அன்று தெரிவித்தார். பத்திரிகை செய்தி அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின்போது இவ்வாறு பேசினார். ஆனால், அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.. இது ஏற்படையதில்லை.. இது தேவையற்ற வழக்கு.. வேண்டுமென்றே குற்றச்சாட்டு வைத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளார்.. சட்டரீதியாக இதனை நாங்கள் எதிர்கொள்வோம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்” என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.