தமிழக தலைமை செயலாளர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்!

நீதித்துறை அதிகாரிகளுக்கான ஓய்வூதிய நிலுவை தொகை மற்றும் ஓய்வூதிய பலன்களை அளிப்பது தொடர்பான வழக்கில், தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று, உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மாவட்ட நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளுக்கான ஊதியம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், கொடுப்பனைவுகளுக்கான பரிந்துரைகளை எஸ்என்ஜேபிசி எனப்படும், இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதிய கமிஷன் வழங்கி வருகிறது. ஆனால், நீதித்துறை அதிகாரிகளுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகை, ஓய்வூதிய பலன்கள் தொடர்பாக கமிஷன் அளித்த பரிந்துரைகளை தமிழகம் உட்பட 18 மாநிலங்கள் முழுமையாக நிறைவேற்றவில்லை. இந்த பட்டியலில் தமிழகம், மத்திய பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், டெல்லி, அசாம், நாகாலாந்து, மேகாலயா, ஹிமாச்சல், ஜம்மு – காஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், கேரளா, பீகார், கோவா, ஹரியானா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்படி, அனைத்திந்திய நீதிபதிகள் சங்கம் மற்றும் இதே கோரிக்கையை வலியுறுத்தி, 22 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடு முழுதும் உள்ள நீதித்துறை அதிகாரிகளின் பணி நிலைமைகளில் ஒரே சீரான தன்மையை பராமரிக்க உத்தரவிட்டது.

முன்னதாக, நீதிபதிகள் மற்றும் சட்டத்துறையை சார்ந்த அதிகாரிகளை நியமனம் செய்வது, அதேபோன்று ஓய்வூதியம் வழங்குவது ஆகியவை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களானது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் பதிலளிக்காத 18 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் 27ம் தேதி (அதாவது இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர், “இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அதற்கான தொகை அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எனினும், 3 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும். தமிழக தலைமை செயலாளர் கடந்த 19ம் தேதிதான் புதிதாக பொறுப்பேற்றுள்ளார் என்பதால் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும். தேவைப்பட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜராவார். இதனை நீதிமன்றம் கருத்தில் கொண்டு அனுமதி வழங்க வேண்டும்” என்று நீதிபதிகளிடம் கோரிக்கையை வைத்தனர்.

இதையடுத்து, நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் 3 மாதம் அவகாசம் கண்டிப்பாக வழங்க முடியாது. வேண்டுமென்றால் 4 வாரம் தருகிறோம். அதேபோன்று தலைமை செயலாளர் நேரில் ஆஜராவதில் இருந்தும் எந்தவித விலக்கும் அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிய நீதிபதிகள், விசாரணையை இன்று 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தனர். அந்தவகையில், நீதிபதிகள் மற்றும் சட்டத்துறையை சார்ந்த அதிகாரிகள் நியமனம் செய்வது, ஓய்வூதியம் வழங்குவது ஆகியவை தொடர்பான விவகாரத்தில் தலைமை செயலாளர்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தனர். அந்தவகையில், தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர், உதயச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அப்போது மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை அளிக்கும் உத்தரவை அமல்படுத்தும் விவகாரத்தில், எஸ்என்ஜேபிசி பரிந்துரைத்த நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாகவும், அதை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தலைமை செயலாளர் விளக்கம் அளித்தார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சந்திரசூட், “4 வாரங்களுக்குள் உரிய பணப்பலன்களை வழங்கும் பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். நிதியை ஒதுக்கிவிட்டதால், தமிழ்நாட்டின் மீதான நடவடிக்கை கைவிடப்படுகிறது.. இந்த வழக்கும் முடித்து வைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.