தற்போது நாட்டில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் அருவருப்பானவை: விக்ரம்!

“சமத்துவமாக இருந்தாலும் சரி, பெண்களின் பாதுகாப்பாக இருந்தாலும் சரி, குழந்தைகளாக இருக்கும்போது அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். தற்போது நாட்டில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் அருவருப்பானவை” என பாலியல் சர்ச்சைகள் குறித்து நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் செப்டம்பர் 6-ம் தேதி இந்தி பேசும் வடமாநிலங்களில் வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும், மலையாள திரையுலகில் வெடித்துள்ள பாலியல் புகார்கள் குறித்தும் பேசிய நடிகர் விக்ரம் கூறியதாவது:-

அனைத்து பெண்களும் தங்களை பாதுக்காப்பானவர்களாக உணர வேண்டும். அவர்கள் அதிகாலை 3 மணி அளவில் தனியாக தெருக்களில் நடந்து செல்லும் சூழல் உருவாக வேண்டும். மேலும், அந்த சமயத்தில் யாராலும் தனக்கு தொந்தரவு நேராது என்ற நிலைமை ஏற்பட வேண்டும். சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நம் கடமை. தற்போது நாட்டில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அருவருப்பை ஏற்படுத்துகின்றன. பாலின சமத்துவம் என்பது மிகவும் முக்கியமானது.

மும்பையில் இரவிலும் தெருக்களில் தனியே ஒரு பெண்ணால் நடந்து செல்ல முடியும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், தமிழகத்தில் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்று தான் நினைக்கிறேன். இவை அனைத்தையும் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். சமத்துவமாக இருந்தாலும் சரி, பெண்களின் பாதுகாப்பாக இருந்தாலும் சரி, குழந்தைகளாக இருக்கும்போது அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை மாளவிகா மோகனன் கூறுகையில், “இதன் வேரை எப்படி கண்டறிந்து, நிறுத்துவது? இந்தச் சம்பவங்கள் ஒரு கட்டத்தில் உங்களை உதவியற்றவர்களாக உணர வைத்துவிடுகிறது. ‘இது எப்போதும் நடக்கும் ஒரு விஷயம்’ என்ற ஒருவித ஆணாதிக்க மனநிலையை சமூகத்தில் உருவாக்கிவிடுகிறது. ஆண்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை. இது ஒருவகையான பொதுபுத்தியாக உருவெடுத்துள்ளது. பெண்களிடையே கூட இப்படியான ஒரு மனநிலை இருப்பதை உணர முடிகிறது” என்றார்.