‘அம்மா’ அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து மோகன்லால் ராஜினாமா!

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு மலையாள திரையுலகில் பாலியல் புகார் தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது. இந்த சூழலில் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’ (AMMA) அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார்.

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அது வெளியான பின் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர். நடிகர்கள், ஜெயசூர்யா சித்திக், ரியாஸ் கான் உட்பட பலர் மீதும் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதற்கிடையே வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரபல இயக்குநரும் மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.

இதனால் சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து ரஞ்சித் விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால் பதவியிலிருந்து அவர் விலகினார். முன்னதாக ‘அம்மா’ அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரும் பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து இந்த விவகாரத்தில் ‘அம்மா’ அமைப்பின் தலைவர் மோகன்லால் அமைதி காப்பதாக புகார் எழுந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை தனது தலைவர் பொறுப்பை மோகன்லால் ராஜினாமா செய்தார். அவருடன் மற்ற செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள நடிகர்கள் சங்கத்தில் நிகழ்ந்த இந்த ‘கூண்டோடு’ ராஜினாமா முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு தளங்களில் பயணித்து வரும் பிருத்விராஜ் சுகுமாரன் இந்த விஷயத்தில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மக்கள் அதிகார பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்றும், ஹேமா குழு அறிக்கையின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (அம்மா) இந்த விஷயத்தில் சரியாக செயல்படாது பற்றி தெரிவித்ததோடு, ஹேமா கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை தனக்கு எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

“அறிக்கையில் உள்ள கண்டுபிடிப்புகள் குறித்து மிகவும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தண்டிப்பது முக்கியம். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போது பதவி விலக வேண்டும். ஆச்சரியப்படும் விதமாக, அறிக்கையில் உள்ள கருத்துக்களால் தான் அதிர்ச்சியடையவில்லை என்றும் பிருத்விராஜ் கூறியதாகக் கூறப்படுகிறது. “எனது திரைப்பட இருப்பிடம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதோடு எனது பொறுப்பு முடிவடையவில்லை, முழு தொழில்துறையும் மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது முக்கியம்” என்று அவர் மேலும் கூறினார்.

மலையாள திரையுலகில் தங்களுக்கு எதிராக பேசுபவர்களை தடை செய்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது என்றும் பிருத்விராஜ் கூறியுள்ளார். இதேபோல தவறான குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ள பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

“நான் அதை எதிர்கொள்ளவில்லை என்பதற்காக திரையுலகில் ஒழுங்கமைக்கப்பட்ட சக்தி இல்லை என்பதை என்னால் மறுக்க முடியாது. கலைஞர்களை தடை செய்ய இதுபோன்ற திட்டமிட்ட நடவடிக்கை இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய பிரித்விராஜ், பெண்களுக்காக குரல் கொடுக்கும் வகையில் அம்மாவில் பெண் உறுப்பினர் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.