பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணையாததால் பள்ளி வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியுதவியை மத்திய அரசு மீண்டும் நிறுத்தியுள்ளது. இதனால் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மானியத்தை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் (சமக்ரா சிக் ஷா) இந்த நிதியை பெற மத்திய அரசின் விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். இதற்கிடையே மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம் ஸ்ரீ பள்ளி எனும் திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் இதுவரை இணையவில்லை. அதேநேரம், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு உட்பட சில கோரிக்கைகளை தமிழகம் முன்வைத்தது. ஆனால், அதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டதால் இந்த திட்டத்தில் தமிழகம் சேரவில்லை. இதனால் கடந்த கல்வியாண்டில் (2023-24) 4-வது தவணை நிதியுதவியும் நடப்பு கல்வியாண்டில் (2024-25)முதல் தவணை நிதியையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இதனால் மாநில அரசின் பங்களிப்பை கொண்டு தற்போது திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், நீண்ட காலத்துக்கு இதை கொண்டு சமாளிக்க முடியாது. எனவே பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் பாதிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
தமிழகம் உட்பட சில மாநிலங்களில் ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய முதல் தவணை நிதிவிடுவிக்கப்படவில்லை. 2024-25-ம்கல்வியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2,152 கோடியாகும். இதற்கான முன்மொழிவுகள் ஏப்ரல் மாதமே சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், முதல் தவணையான ரூ.573 கோடியும் முந்தைய ஆண்டுக்கான ரூ.249கோடியும் விடுவிக்கவில்லை.
பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் தேசியகல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்துவது, நிதியை பெறுவதற்கான முன்நிபந்தனையாக இணைக்க மத்திய அரசு முயற்சிப்பது தெரியவந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள குறிப்பிட்ட சில விதிகள் ஏற்புடையதாக இல்லை. எனவே,பொதுப்பட்டியலில் உள்ள கல்விதொடர்பான விஷயங்களில் மாணவர்களை பாதிக்கும் கொள்கைகளை அமல்படுத்தும்போது, அதில் ஒவ்வொரு மாநிலத்தின் நியாயமான கருத்தும் உள்ளடங்கி இருக்க வேண்டும்.
சமக்ரா சிக் ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை, பின்தங்கிய குழந்தைகளின் கல்வி மற்றும் ஆசிரியர்களை நேரடியாக பாதிக்கும். எனவே, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க பிரதமர் மோடி இதில் நேரடியாக தலையிட வேண்டும். விவாதங்கள் தேவைப்படும் ஒரு கொள்கையை கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.