மருத்துவர்களுக்கிடையேயான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்: டி.டி.வி. தினகரன்

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்படும் ஊதியத்தைப் போலவே நாடு முழுவதும் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற தமிழக அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தல் வரவேற்புக்குரியது.

ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் அரசு மருத்துவர்களின் ஊதியத்தை மறு ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணை எண் 354-ஐ அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டிருக்கும் தி.மு.க. அரசின் நடவடிக்கை அரசு மருத்துவர்களுக்கு இழைக்கும் அநீதி ஆகும்.

அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா, மராட்டியம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கும் நடைமுறை அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் அந்த நடைமுறையை செயல்படுத்த மறுப்பது ஏன்? என அரசு மருத்துவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, பொதுமக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையிலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலை அமல்படுத்தும் வகையிலும், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.