ஸ்ரீ ரெட்டி யாருன்னே எனக்குத் தெரியாது: விஷால்!

நடிகராகவும் தமிழ் நடிகர் சங்க தலைவராகவும் இருக்கும் விஷால் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், சினிமா வாய்ப்புக்காக நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்பவர்களை உடனே செருப்பால் அடிங்க என்று பேட்டி கொடுத்து இருக்கிறார்.

தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் தற்போது மிகவும் பரபரப்பாகவும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள பிரச்னை என்றால் அது மலையாள சினிமா உலகில் நடைபெற்ற நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை பிரச்னைதான். முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த விரிவான விசாரணை அறிக்கையின் காரணமாக இந்தப் பிரச்னை பூதாகரமாக மாறியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த மலையாள நடிகர் சங்கமும் கலைக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் மோகன் லால் அவராகவே முன் வந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஹேமா கமிட்டி அளித்த விசாரணை அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆள்த்தியது என்றால், மோகன் லால் தனது பதவியை ராஜினாமா செய்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோகன் லால் ராஜினாமா செய்ததால், மோகன் லாலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் எனவும், அதனால்தான் அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் எனவும் கூறப்பட்டது.

இதுமட்டும் இல்லாமல், ஹேமா கமிட்டி அளித்த விசாரணை அறிக்கைக்குப் பின்னர், இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல், பல நடிகர்கள் மீது பாதிக்கப்பட்ட நடிகைகள் புகார் அளித்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த மலையாள சினிமா உலகமே பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளது. இதுமட்டும் இல்லாமல், கேரளாவில் இருந்து இந்தியாவில் செயல்பட்டு வரும் பலமொழி திரைப்படங்களில் நடித்த நடிகைகளும் உள்ளனர். இந்த நடிகைகள் ஹேமா கமிட்டியிடம் மற்ற மொழி நடிகர்கள், இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் பெயரையும் குறிப்பிட்டு இருக்கலாம் என பலரும் நடுங்கிக் கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஷால் இன்று (ஆகஸ்ட் 29) தனது 47வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். தனது பிறந்த நாளில் கோவிலுக்குச் சென்றுவிட்டு, சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவளித்து அவர்களிடமும் ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால், கேரளாவை போல தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போன்ற குழு இன்னும் சில நாட்களில் அமைக்கப்படும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக தமிழ் நடிகர் சங்கம் நிற்கும் என்று உறுதி கூறியிருக்கிறார். அதோடு மேலும் அவர் பேசுகையில், கண்டிப்பாக எவனோ ஒருத்தன் சினிமா வாய்ப்புக்காக ஒரு பெண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூப்பிடுவான்.. பெண்ணை மதிக்காமல் அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முயற்சி பண்ணுவாங்க.. இதை எலலாம் தவிர்க்க ஒரே ஒரு விஷயம் இருக்கு, என்னன்னா அந்தப் பெண்ணிற்கு மன தைரியம் வேணும். அந்தப் பெண்மணி அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட அந்த மாதிரி ஆட்களை செருப்பால அடிக்கணும். அதுதான் நான் சொல்லுவேன், வேற ஒன்றும் இல்லை என்று விஷால் கூறி இருக்கிறார்.

அதோடு மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி விசாரணை நடைபெற்றது போல தமிழ்நாட்டிலும் நடைபெறுமா? என்று கேட்ட கேள்விக்கு கண்டிப்பாக பண்ணுகிறோம் என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டிலும் 10 பேர் கொண்ட குழு வைத்து ஒரு விஷயம் பண்ணுறோம். அதற்கான ஏற்பாடுகள் போய்க் கொண்டிருக்கிறது. அதற்கான அறிவிப்பு சீக்கிரம் வரும். அதை செய்ய வேண்டியது எங்களுடைய கடமை. இப்போ நடிகர் சங்கம் என்பது வெறும் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களும் சரிசமமாக இருக்காங்க. பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது எங்களுக்காக இருக்காங்களா என்று கேட்கும் போது அவங்களுக்கு நடிகர் சங்கம் நாங்க இருக்கிறோம் என்று தைரியம் கொடுப்போம் என்று கூறினார்.

அதேபோல் செய்தியாளர் தரப்பில் இருந்து நடிகை ஸ்ரீ ரெட்டி உங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளாரே என கேள்வி எழுப்பப்பட்டது. செய்தியாளரளின் இந்தக் கேள்விக்கு, எனக்கு ஸ்ரீ ரெட்டி யாரென்று தெரியாது. ஆனால் அவர் செய்த சேட்டைகள் எனக்கு நன்றாகத் தெரியும். உண்மை எதுவென்று தெரியாமல், ஒருவர் மீது குற்றம் சாட்டுவது தவறான செயல் என பதில் அளித்துள்ளார். இது தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே, நடிகர் விஷால் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறி, தன்னை பாலியல் இச்சைக்கு உடந்தை ஆக்கினார் என பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். மேலும் காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.