பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மெத்தனம் காட்டும் மோடி அரசு: மல்லிகார்ஜுன கார்கே!

பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாகவும் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருவதோடு, பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு தீவிரமான பிரச்னை. இந்த குற்றங்களைத் தடுப்பது நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடையேயும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பெண்களுக்கு இழைக்கப்பட்ட எந்த அநீதியும் சகித்துக்கொள்ள முடியாதது, வேதனையானது மற்றும் மிகவும் கண்டிக்கத்தக்கது. பெண்களுக்குச் சம உரிமை வழங்குவது மட்டுமல்ல, பெண்களைப் பாதுகாப்பதும் மிகவும் அவசியம்.

நாட்டில் பெண்களுக்கு எதிராக ஒரு மணி நேரத்திற்கு 43 குற்றங்கள் பதிவாகின்றன. மேலும் நாட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தலித்-பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நாள்தோறும் 22 குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அச்சம், மிரட்டல், சமூக காரணங்களால் பதிவு செய்யப்படாத எண்ணற்ற குற்றங்கள் உள்ளன.

பிரதமர் மோடி தனது உரையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பலமுறை பேசியும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடந்த 10 ஆண்டுகளாக அவரது அரசு உறுதியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாகப் பாதிக்கப்பட்டவரின் குணாதிசயத்தைப் படுகொலை செய்துள்ளது. இது வெட்கக்கேடானது.

ஒவ்வொரு சுவரிலும் பெண்களைக் காப்போம் என்று ஓவியம் வரைவது சமூக மாற்றத்தை ஏற்படுத்துமா? அல்லது அரசாங்கத்தின் சட்டம் ஒழுங்கை திறமையாக மாற்றுமா? நமது குற்றவியல் நீதி அமைப்பு மேம்பட்டுள்ளதா? சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவினர் பாதுகாப்பான சூழலில் வாழ முயுமா?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.