கேரளாவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ரயிலில் சென்ற பெண் என்ஜினியரை, கழிவறைக்குள் தள்ளி அத்துமீறிய இரண்டு பேர், பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கேரளாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடந்த 26-ந் தேதி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. குறிப்பிட்ட அந்த ரயிலில் முன்பதிவு பெட்டியில் பெண் என்ஜினீயர் ஒருவர் பயணம் செய்து வந்துள்ளார். அவரை பார்த்துக்கொண்டே வந்த இரண்டு பேர், நடவடிக்கைகளை கண்காணித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை ரயில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள், திடீரென என்ஜினியர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்று தப்பி ஓடியிருக்கிறார்கள். உடனே பெண் என்ஜினியர் பதற்றம் அடைந்து 2 பேரையும் விரட்டிச்சென்றாராம். கழிவறை அருகே வரும் போது திடீரென பெண் என்ஜினியரை அந்த 2 பேரும் அருகில் இருந்த கழிவறைக்குள் தள்ளி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்களாம். பின்னர் ரயிலில் இருந்து குதித்து இருவரும் தப்பிச் சென்றுவிட்டார்களாம். இதில் நிலைகுலைந்த அந்த பெண், ரயில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வந்த போது, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ரயில்வே போலீஸ் எஸ்பி ஈஸ்வரனிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகளின் விவரங்களையும் போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, ரயில்வே போலீசார் கூறுகையில், ‘பெண் என்ஜினீயரின் புகாரையடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ரயில்களில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.