அரசியலில் இருப்பதால் தனிப்பட்ட வாழ்க்கை ரொம்ப பாதிக்கப்படுது, சினிமா வாழ்க்கை அதிகம் பாதிக்கப்படுகிறது. எனவே, இப்போது உள்ள சூழலில் முழுக்க முழுக்க நான் சினிமாவை நம்பியிருக்கிறேன் என்று ஆர்.கே சுரேஷ் கூறியுள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளராக இருந்து நடிகரானவர் ஆர்.கே சுரேஷ். பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவராகவும் இருக்கிறார். ஆருத்ரா மோசடி வழக்கில் இவரது பெயரும் அடிபட்டது. பாஜகவில் இருக்கும் ஆர்.கே சுரேஷ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியலில் விருப்பப்பட்டுத்தான் வந்தேன். முதலில் கமல் சாரிடம் தான் சேர்ந்தேன். அதன்பிறகு மோடியின் செயல்பாடுகளில் ஈர்க்கப்பட்டு நான் இஷ்டப்பட்டு தான் பாஜகவிற்கு போனேன். ஆனால் அரசியலில் இருப்பதால் தனிப்பட்ட வாழ்க்கை ரொம்ப பாதிக்கப்படுது.. சினிமா லைஃப் ரொம்ப பாதிக்கப்படுது.. சினிமாவில் இல்லாத ஆளாக இருந்தால் அரசியலில் பேலன்ஸ் பண்ணி போவேன். ஆனால் இப்போ உள்ள சூழலில் முழுக்க முழுக்க நான் சினிமாவை நம்பியிருக்கிறேன். எனக்கு வாழ்வாதாரம் சினிமாதான்.. சோறு போடுவதே சினிமாதான்.. இப்போ நான் சூட்டிங் போயிட்டுதான் இருக்கேன். நல்ல வாய்ப்புகள் வருது.. அதனால் சினிமாவில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தனும் என நான் விரும்புறேன்.
பாஜக உள்பட எல்லா கட்சியும் நல்ல கட்சிதான்.. நான் பாஜகவில் இப்போது இருக்கிறேனா? இல்லையா? என்று கேட்கிறீர்கள்.. அது காலம் பதில் சொல்லும்.. இப்போதைக்கு நான் நடிக்கிறேன்.. சினிமா நடிகராக இருக்கிறேன்.. அவ்வளவுதான்.. நான் பார்த்ததிலேயே ரொம்பவும் திட்டமிட்டு கட்சி ஆரம்பித்தவர் விஜய் தான்.. தனிப்பட்ட முறையிலும் தெரியும் எனக்கு.. எந்த விஷயத்தை எடுத்தாலும் ரொம்ப பொறுமையாக எடுத்து 10, 12 வருடம் அதற்கான திட்டமிட்டு சர்வே எடுத்து இன்னைக்கு கொடிய கொண்டு வந்த விஷயம் வரை ரொம்ப பொறுமையாக கையாண்டு இருக்கிறார். அந்த விஷயம் ரொம்ப பிடித்து இருக்கிறது. என்ன செய்கிறோம் என்பது அவருக்கு தெளிவாக தெரியும். திடீரென்று ஓவர் நைட்டில் அவர் வரவில்லை.. 10 வருடமாக அதற்கான தளத்தை உருவாக்கிதான் வந்து இருக்கிறார்.
250 கோடி 300 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்.. கமல்ஹாசன் எப்படி பேலன்ஸ் செய்தாரோ அதை விட ஒரு படி மேல் ஜாஸ்தியாகத்தான் விஜய் இருப்பார்.. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.. விஜய் கூட நான் முதலில் சினிமாவில் நடிக்கிறேன்.. அதன்பிறகு அவருடன் அரசியலில் பயணிப்பது பற்றி யோசிக்கலாம்.. இப்போதைக்கு எனக்கு அரசியலில் பெரிய ஈடுபாடு இல்லை.. தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம்.. ஒரு சார்ந்த படங்களில் நடிக்க வேண்டாம் என நான் முடிவு செய்து இருக்கிறேன். அதனால் நடிக்க கூடிய படங்கள் பொதுவான படங்களாகத்தான் இருக்கும்.. யாரையும் சார்ந்து இருக்காது. நான் சொல்லும் விஷயம் உங்களுக்கு புரிந்து இருக்கும்.. இவ்வாறு அவர் பேசினார்.