காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தின்போது தற்காப்புக் கலைஞர்களுடன் பயிற்சி செய்த விடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தேசிய விளையாட்டு தினம் இன்று (ஆகஸ்ட் 29) கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த நாளையொட்டி தனது விளையாட்டு அனுபவங்களையும், ஒற்றுமை நடைப்பயணத்தின்போது அவர் மேற்கொண்ட தற்காப்புக் கலையின் விடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில் ராகுல் காந்தி மாணவர்களுக்கு ஜப்பானிய தற்காப்பு கலை நுட்பங்களைப் பற்றி எடுத்துரைப்பதாக உள்ளது. அதில், ஐகிடோவில் கருப்பு பெல்ட் என்றும், ஜியு-ஜிட்சுவில் நீல பெல்ட் என்றும் மாணவர்களுக்கு கூறுகிறார். மேலும் மாணவர்களுக்கு பல்வேறு நுட்பங்களைக் கற்பிப்பதோடு, “மென்மையான கலை” பற்றியும் பயிற்சி அளிக்கிறார்.
ஒற்றுமை நீதிப் பயணத்தின்போது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்யவேண்டி இருந்த நிலையில், நாங்கள் தங்கும் முகாமில் தினமும் மாலையில் ஜப்பானியர்களின் தற்காப்புக் கலையான ஜியு-ஜிட்சு பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாங்கள் தங்கியிருந்த நகரங்களைச் சேர்ந்த இளம் தற்காப்புக் கலைஞர்கள் ஒன்றிணைந்து எங்களுக்கு உதவினர்.
மேலும் தியானம், ஜியு-ஜிங்ட்சு, ஜகிடோ இவற்றை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதும், வன்முறையை மென்மையாக மாற்ற மென்மையான கலை மூலம் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருந்தது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அந்த விடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, 2022 செப்டம்பர் முதல் ஜனவரி 2023 வரை ஒற்றுமை நடைப்பயணமும், பின்னர் 2024 ஜனவரி முதல் மார்ச் வரை இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தையும் ராகுல் மேற்கொண்டார். தற்போது, ராகுல் காந்தி மேற்கொள்ளவிருக்கும் புதிய பயணம் தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். விரைவில் “டோஜோ யாத்திரை” தொடங்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். டோஜோ என்பது தற்காப்புக் கலைகளுக்கான பயிற்சி என்பதாகும்.