ஜனநாயக உரிமையைப் பறிக்கும் வகையில் செயல்பட்ட கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் ரகுபதி மீது துறைரீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எங்களது கட்சியின் சார்பில் ஆக.28-ம் தேதி ரிப்பன் மாளிகை அருகே எனது தலைமையில் போராட்டத்துக்கு திட்டமிடப்பட்டது. சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள விக்டோரியா கட்டிட நுழைவுவாயில் அருகில் ஆர்ப்பாட்டத்துக்காக கட்சியினர் கூடினர். காலை சுமார் 11 மணி அளவில் அப்பகுதிக்கு நானும் கட்சியின் முக்கியத் தலைவர்களும் சென்றோம்.
அப்போது கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ரகுபதி அங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பதிலாக 50 மீட்டர் தள்ளி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு தெரிவித்தார். அவர் கூறியபடி, கட்சியினர் 50 மீட்டர் தள்ளிச் சென்றனர். ஆனால், துணை ஆணையர் மேலும் உட்புற சந்தில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துமாறு வலியுறுத்தியதுடன் காவல்துறையினர் மூலம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த பெண்கள் உள்ளிட்டவர்களை பிடித்துத் தள்ளிவிட்டார். இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, எங்களை ஒருமையில் பேசியும், கையால் தள்ளியும், அடாவடித்தனமாகச் செயல்பட்டார்.
இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது `கைது செய்ய வேண்டிவரும்’ என மிரட்டும் வகையில் சத்தமிட்டார். கடைசி வரையில் காவல் துறையினரை வைத்து சூழ்ந்துகொண்டு ஆர்ப்பாட்டம் சரியாக நடத்துவதற்கே அவர் அனுமதிக்கவில்லை. இருப்பினும் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு கிளம்பிய என்னைக் கைது செய்வதாகக் கூறி, வாகனத்தில் ஏற்றிச் சென்றார். இந்த போக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாக அமைந்துள்ளது. எனவே, கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ரகுபதி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.