அரசு மருத்துவமனைகளில் சுகாதார சீர்கேடுகளை போக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

அரசு மருத்துவமனைகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை போக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சென்னை நகரின் மையப்பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை கழிவுநீரால் சூழ்ந்து, துர்நாற்றம் வீசுவதோடு நோய்த் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மருத்துவமனைக்குள் இதயப் பிரிவு, நரம்பு மண்டலப் பிரிவு போன்ற முக்கிய துறைகளுக்கு அருகே கழிவுநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, கழிவறைக்கு உள்ளே சென்றுதண்ணீர் ஊற்றினால் அது வெளியில்தான் வருகிறது என்றும்,அந்த கழிவுநீரை மிதித்துக்கொண்டே மீண்டும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு செல்கிறார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களும் அந்த கழிவுநீரை மிதித்துக்கொண்டே மூக்கை மூடியவாறு செல்கின்றனர். இம்மருத்துவமனையில் உள்ள பெரும்பாலான கழிவறைகள் துர்நாற்றம் வீசுகின்றன. கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக பல இடங்களில் நோயாளிகள் கழிவறைகளைப் பயன்படுத்த முடியாத நிலை கடந்த ஒரு வாரமாக ஏற்பட்டுள்ளது.

ஓரிரு நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளை, காலியாக உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு முதல்வரை நியமனம் செய்ய இயலவில்லை எனில், மருத்துவக் கல்லூரிகளை திறப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியது.

ஏற்கெனவே, நான் அரசுமருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதை குறிப்பிட்டு உடனடியாக கொரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்பவும், அரசு மருத்துவமனைகளில் மருந்துப் பொருட்கள் பற்றாக்குறை குறித்தும் அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் அளித்திருந்தேன்.

இனியாவது, சுகாதாரத் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும். ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் காணப்படும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.