சிவாஜி சிலை விழுந்து நொறுங்கிய சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!

பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சிவாஜியின் 35 அடி உயர சிலை கடந்த திங்கள் அன்று உடைந்து விழுந்தது. இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் பிரதமர் மோடி பேசும் போது, மராட்டிய பேரரசர் சிவாஜி உடைந்து விழுந்த சம்பவத்திற்காக பகிரங்க மன்னிப்பு கோரினார்.

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம், மால்வான் தாலுகாவில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் 17-ஆம் நூற்றாண்டின் மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு கடற்படை தினத்தன்று (டிசம்பர் 4) திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் மோடி திறந்து வைத்த சிவாஜியின் சிலை, கடந்த திங்கள் அன்று உடைந்து விழுந்தது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் சிலை சரியாக அமைக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டின. லோக்சபா தேர்தலை முன்னிட்டு சத்ரபதி சிவாஜியின் சிலை அவசர அவசரமாக நிறுவப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்றும் குற்றம்சாட்டின.

இதற்கு பதில் அளித்த மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்னாத் ஷிண்டே, மணிக்கு 45 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் இந்த விபத்துக்கு காரணம் என்று விளக்கம் அளித்தார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “சிலை உடைந்து விழுந்தது வேதனை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளின் செயல் அருவருப்பானது. இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை. இடிந்த சிவாஜியின் சிலை மகாராஷ்டிரா மாநில அரசால் நிறுவப்படவில்லை. சிலையின் கட்டுமானத்தை கண்காணித்து வந்தது கடற்படை. காற்றின் வேகத்தைத் தாங்கவல்லதாக அமைக்க வேண்டும் என்பது போன்ற முக்கியமான காரணிகளை சிலையை உருவாக்குவதற்கும் நிறுவுவதற்கும் பொறுப்பானவர்கள் கவனிக்காமல் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பயன்படுத்தப்பட்ட இரும்பின் தரம், கடல் காற்றின் தாக்கம் ஆகியவற்றால் சிலை துருப்பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே சிலையை உருவாக்குவதற்கு முன்பு மேலே சொன்ன அனைத்து அம்சங்களையும் சிலை தயாரிப்பாளர்கள் கவனித்தார்களா என்பது கேள்வியாக உள்ளது. உடைந்து விழுந்த அதே இடத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பெரிய சிலையை நாங்கள் நிச்சயம் அமைப்போம்” என்று உறுதி அளித்தார்.

இதனிடையே சிவாஜி சிலையை அமைத்த ஒப்பந்ததாரர் ஜெய்தீப் ஆப்தே மற்றும் கட்டிட பொறியாளர் சேத்தன் பாட்டீல் ஆகியோர் மீது உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். இதில் கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒப்பந்ததாரர் ஜெய்தீப் ஆப்தே தலைமறைவான நிலையில் அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் பால்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மால்வானில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலை உடைந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பிரதமர் மோடி கூறுகையில், “சத்ரபதி சிவாஜி மகராஜா என்பது நமக்கு வெறும் பெயர் அல்ல.. இன்று நான் என் கடவுள் சத்ரபதி சிவாஜி மகாராஜாவிடம் தலை வணங்கி மன்னிப்பு கேட்கிறேன். அவர் மீது நாங்கள் அளவுக் கடந்த மதிப்பு வைத்துள்ளோம். நாங்கள் மற்றவர்களை போல் (எதிர்க்கட்சிகளைப் போல்) தவறாகப் பேசுபவர்கள் இல்லை. இந்த மண்ணின் மகனான வீர் சாவர்க்கரை அவமதித்ததுடன், அவர்கள் (காங்கிரஸ்) மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லை. மேலும் நீதிமன்றத்திற்குச் சென்று போராடத் தயாராக இருக்கிறார்கள்” என்று கூறினார்.