பார்முலா 4-க்கான எப்ஐஏ சான்றிதழ் பெற இரவு 8 மணி வரை அனுமதி: உயர் நீதிமன்றம்!

சென்னையில் பார்முலா-4 ஸ்ட்ரீட் கார் பந்தய போட்டிகளை நடத்துவதற்கான சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழைப் பெறுவதற்கான கால அவகாசத்தை இரவு 8 மணி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் சென்னையில் பார்முலா-4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் இன்றும் (ஆக.31), நாளையும் (செப்.1) தீவுத்திடலை சுற்றிலும் உள்ள வட்ட வடிவ சாலையில் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஆயத்த ஏற்பாடுகளும் இரவு, பகலாக மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், இந்த கார் பந்தயத்துக்கு தடை கோரி பாஜக செய்தித் தொடர்பாளரான ஏ.என்.எஸ்.பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பார்முலா-4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் நடத்த தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், கார் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கும் சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழை, பந்தயம் நடத்தப்படும் தினத்தில் 12 மணிக்குள் பெற வேண்டும் எனவும், அதன் நகலை மனுதாரருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், எப்.ஐ.ஏ. சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பந்தயம் நடத்தும் ரேசிங் புரொமோஷன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று சனிக்கிழமை மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவில், பந்தயச் சாலையை ஆய்வு செய்த எப்.ஐ.ஏ. அமைப்பு சில மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தியுள்ளது. அந்த திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சென்னையில் பெய்த மழையின் காரணமாக அந்தப் பணிகளைச் செய்ய காலதாமதாகிறது. எனவே, சான்றிதழ் பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்தை பகல் 12 மணியிலிருந்து மாலை 6 வரை என நீட்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்று பாலாஜி அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது ரேசிங் புரொமோஷன் நிறுவனம் சார்பில், “இன்று 3-4 மணியளவில் பயிற்சிப் போட்டிகள் தொடங்க இருந்தன. ஆனால் நேற்று பெய்த மழையின் காரணமாக பயிற்சிப் போட்டிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 5.30 மணிக்கு போட்டிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. எனவே, 12 மணிக்கு எப்.ஐ.ஏ. சான்றிதழ் பெற வேண்டும் என்ற உத்தரவை திருத்தி அமைக்க வேண்டும். மாலை 6 மணிக்குள் சான்றிதழ் கிடைத்துவிடும். அதன்பிறகு போட்டிகள் தொடங்கப்படும். பந்தயத்தைத் தொடங்குவதற்கு முன்பாக சான்றிதழ் பெறப்படும். வழக்கமாக இந்த சான்றிதழ் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்துக்கு முன்புதான் வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசுத் தரப்பிலும், பந்தயம் தொடங்குவதற்கு முன்பாக சான்றிதழ் பெறப்படும், என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒருவேளை சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டால், என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ரேசிங் புரொமோஷன் நிறுவனம் சார்பில், சான்றிதழ் கிடைக்காத பட்சத்தில், பந்தயம் தள்ளிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஃபார்முலா 4 கார் பந்தயத்தைப் பெறுவதற்கான கால அவகாசத்தை இரவு 8 மணி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். இரவு 8 மணிக்குள் எப்.ஐ.ஏ-வின் சான்றிதழ் பெற முடியாத பட்சத்தில், கார் பந்தயத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயங்களை நடத்துவதற்கான எப்.ஐ.ஏ-விடம் இருந்து பெறப்பட்ட தற்காலிக சான்றிதழ்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள புதிய அட்டவணையின்படி, இன்று இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கார் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கும் சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழ் இன்று (ஆக.31) மாலை 6 மணிக்கு கிடைக்கும் என்ற தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, பந்தயம் நடைபெறவுள்ள 3.5 கி.மீட்டர் தொலைவுக்கான வழித்தடத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து எப்.ஐ.ஏ-விடம் இருந்து பெறப்பட்ட தற்காலிக சான்றிதழ்களின் அடிப்படையில் போட்டிக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கி நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும், ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த அட்டவணையின்படி, இன்றைய தினம் பிரதான போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எப்.ஐ.ஏ. சான்றிதழ் பெறுவதற்கான கால தாமதத்தைத் தொடர்ந்து, இன்று பயிற்சிப் போட்டிகள் மட்டுமே நடைபெறும் என்று புதிய அட்டவணையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியன் ரேசிங் லீக் மற்றும் பார்முலா 4 ரேசிங்குக்கான பயிற்சிகள் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்தப் பயிற்சி போட்டிகள் இரவு 11 மணி வரை நடக்கும் என்று கூறப்படுகிறது.