சென்னை ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையாளர் சிவக்குமார் திடீரென நெஞ்சு வலியால் பலியானார். இந்த நிலையில் பணிச்சுமை காரணமாகவே காவல் உதவி ஆணையர் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார்.
தமிழகம் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 4 சென்னை இன்று மற்றும் நாளை சென்னையில் அண்ணா சாலையில் நடைபெறுகிறது. இன்று போட்டி 7 மணிக்கு தொடங்கிய நிலையில் பயிற்சி போட்டிகள் நடைபெறுகிறது. இந்த கார் பந்தயத்துக்காக தீவுத் திடலில் தொடங்கி பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை வழியாக மீண்டும் தீவுத்திடல் வரை கார் ரேஸ் ட்ராக் அமைக்கப்பட்டு, தடுப்புகள், டயர்கள், வழிகாட்டும் அமைப்புகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்புகள், தொழில் நிறுவனங்களின் ஸ்பான்சர் உள்ளிட்டவை மூலம் செய்யப்பட்டு, மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து கார்பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொடிமர சாலை, அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் என மூன்று கிலோமீட்டர் தீவு திடலை சுற்றியுள்ள பகுதிகளில் தான் இந்த பந்தயமானது நடக்க இருக்கும் நிலையில் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் அங்கு குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ஃபார்முலா கார் ரேஸ் பந்தயத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து வரிசையாக அணிவகுத்து நின்ற கார்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய, சாலையோரங்களில் போட்டிகளை காண வந்த பார்வையாளர்கள் உற்சாகமாக கையசைத்து வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் இந்த பந்தயத்தால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் சென்னை பார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையாளர் சிவக்குமார் திடீரென நெஞ்சு வலியால் பலியானார். கார் பந்தத்துக்காக தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர் நெஞ்சு வலியால் மயக்கம் அடைந்ததாகவும், அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பணிச்சுமை காரணமாகவே காவல் உதவி ஆணையர் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார். இது தொடர்பாக தனது எக்ஸ்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நேற்று பிரதான சாலைகள் கார் பந்தயத்திற்காக அடைக்கப்பட்டதால் மக்கள் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கி தவித்தனர். கொட்டும் மழையிலும் காவலர்கள் போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் தவித்தனர். சென்னையின் நடுவே கார் ரேஸ் நடைபெறுவதால் பெரும் பணிச்சுமைகளால் காவல்துறையினர் திணறுகின்றனர். இது குறித்து நான் நேற்றே குறிப்பிட்டிருந்தேன். முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ள வேளையில் கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரு காவல்துறை அதிகாரியின் உயிர் காவு வாங்கப்பட்டுள்ளது. அநியாயமாக உயிரிழந்த அந்த தம்பிக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி! கார்ப்பரேட் தமிழக அரசே! இனியாவது திருந்து! செய்யும் தவறுகளுக்கு கொஞ்சமாவது வருந்து!” என பதிவிட்டுள்ளார்.