“போதைப் பொருட்கள் ஒழிப்பில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:-
ரயில்வே திட்டங்களுக்காக, தமிழகத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.6,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெறும் ரூ.800 கோடியே ஒதுக்கப்பட்டது. ஆனால், இப்போது தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்படுகிறது. அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப் பொருட்கள் மற்றும் டாஸ்மாக் காரணமாக, ஒவ்வொரு கிராமத்திலும் 20 முதல் 30 பேர் விதவைகளாக இருந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, போதைப் பொருட்களை ஒழிப்பில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிர முனைப்பு காட்ட வேண்டும்.
விளையாட்டை ஊக்குவிக்க வேண்டியது எங்கள் கடமை. ஆனால், கார் பந்தயத்தை சென்னையின் மையப்பகுதியில் தான் நடத்த வேண்டுமா. கார் பந்தயத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே மிகப் பெரிய பகுதி உள்ளது. அதற்கான அடிப்படை கட்டமைப்பு அங்கு உள்ளது. இந்தப் பந்தயத்தை ஸ்ரீபெரும்புதூரில் நடத்தி இருந்தால் அதிக அளவில் பங்கேற்று இருப்பார்கள், யாருக்கும் எந்த இடையூறும் இருந்திருக்காது.
அனைவருக்குமான கல்வி திட்டத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி தவிர்த்து 3-வது மொழியாக வேறு ஏதேனும் ஒரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் மத்திய அரசு கூறுகிறது. மும்மொழி கொள்கை வருவதால் என்ன பிரச்சினை?. மூன்றாவது மொழியாக தமிழை மற்ற மாநிலங்களில் கற்றுக் கொடுப்பதால் தமிழுக்கு தான் பெருமை. அதேபோல, தமிழகத்தில் இந்தியை நாங்கள் திணிக்கவில்லை, மூன்றாவதாக ஏதாவது ஒரு மொழியை கற்று கொள்ள வேண்டும் என்று தான் கூறுகிறோம். மேலும், தமிழகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசுக்கு எந்த ஒரு தடையும் கிடையாது. சரியான படிவத்தை பூர்த்தி செய்தால் மட்டுமே போதுமானது. அதை தவிர்த்து விட்டு தவறான கருத்துக்களை தமிழ் மக்கள் நெஞ்சில் புகுத்த வேண்டாம்” என்றார்.
தொடர்ந்து, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு, “அதுபோன்ற வார்த்தைகள் பேசுவதை சீமான் உள்பட யாராக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். பட்டியல் சாதியை இழிவாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் கூறினார்.