எஸ்எஸ்ஏ கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறினார்.
திருவிடைமருதூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி, தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பூப்பந்தாட்டக் கழகம் சார்பில் 43-வது மாநில அளவிலான சப்-ஜூனியர் பூப்பந்தாட்டப் போட்டி ஆக.31, செப்.1 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வி.சிவக்குமார் வரவேற்றார். எம்.பி எஸ்.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்பி சுதா, எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், முன்னாள் எம்பி செ,ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், சிறப்புரையாற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், மத்திய அரசு எஸ்எஸ்ஏ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி வழங்காதது குறித்து, ஏற்கெனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக எம்.பி.,க்களும், அந்தத் துறை மத்திய அமைச்சர் சந்தித்துள்ளார்கள். மீண்டும் அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துவது மாநிலக் கொள்கைகளுக்கு எதிரானது. கல்வி என்பது அந்தந்த மாநில மக்களுக்கு என்ன தேவை என்பதை, மாநில அரசுகள் முடிவு செய்தால் சரியாக இருக்கும். எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு, அந்த நிதியை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.