நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு!

நடிகர் நிவின் பாலி, சினிமாவில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, பாலியல் தொல்லை செய்ததாக நடிகர் நிவின் பாலி மீது கேரளாவின் நெரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் அளித்தப் புகாரின்பேரில், எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரபல மலையாள நடிகை ஒருவர், கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் எழுந்தது. பின்னர் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்க கேரள நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் குழுவினை அமைத்தது, மாநில அரசு. கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியன்று, நீதிபதி கே.ஹேமாவின் அறிக்கையினை கேரள அரசு வெளியிட்டது. அந்த அறிக்கை பெண் நடிகர்கள் பாலியல் துன்புறுத்தல் என்ற “மோசமான தீமையை” எதிர்கொள்கின்றனர் என்று கூறியது. மேலும் பல முன்னணி நடிகர்கள் பணியிடத்தில், நடிகைகளையும் திரையுலகப் பெண்களையும் கபளீகரம் செய்ததை உறுதிப்படுத்தியது.

இந்த அறிக்கை வெளியானதற்குப் பின், பலதரப்பட்ட நடிகைகளும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லையை வெளியில் பேசிவருகின்றனர். கேரளாவின் முன்னணி நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ், இயக்குநர் சித்திக், இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இதை விசாரிக்க வேண்டிய கேரளாவின் நடிகர் சங்கமான அம்மா சங்கத்தின் தலைவர் மோகன் லால் ராஜினாமா செய்தார். மேலும் பல நிர்வாகிகளும் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால், அம்மா சங்கம் முற்றிலுமாக கலைந்தது.

இந்நிலையில் நடிகர் முகேஷ் முன்ஜாமீன் பெற்று வைத்துள்ளார். அதேபோல் நடிகை சர்மிளா, மோகனன் என்னும் புரொடியூசர் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகக் கூறினார். அதேபோல் நடிகை ஸ்ரீலேகா மித்ராவும் ரஞ்சித் பாலகிருஷ்ணன் என்பவர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறினார்.

இந்நிலையில் நடிகர் நிவின் பாலி மீது ஒரு பாலியல் தொல்லை புகார் வந்துள்ளது. தன்னை திரைப்படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி, நடிகர் நிவின் பாலி துபாய்க்கு அழைத்துச்சென்று, நவம்பர் 2023ஆம் ஆண்டு, பாலியல் வன்கொடுமை செய்ததாக எர்ணாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் நிவின் பாலி மற்றும் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் உட்பட ஆறுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குப் பதிவினை ஓனுங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் எல்.ஐ.டி குழு விசாரணை நடத்தும்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன் மீதான பாலியல் புகார் குறித்து மலையாள நடிகர் நிவின் பாலி விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனது விளக்கத்தை அளித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் பாலியல் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும் நிவின் பாலி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர், “ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகத் தவறான தகவல் பரவி வருகிறது.. இது முற்றிலும் பொய் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க நான் எந்த எல்லைக்கும் செல்வதில் உறுதியாக இருக்கிறேன். மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டோரை வெளிச்சத்திற்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கை எடுப்பேன். அக்கறைக்கு நன்றி. மற்ற விஷயங்களை சட்டப்பூர்வமாகக் கையாள்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.