எல்லா இடங்களிலும் பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன: சரத்குமார்

எல்லா இடங்களிலும் பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மிக மிக அவசியம் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் பேசியதாவது:-

மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரிக்க இந்தியாவிலேயே முதன்முறையாக ஹேமா கமிட்டி 2017-ல் அமைக்கப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பதை ஹேமா கமிட்டி உறுதி செய்துள்ளது. அவர்கள் பெயரை குறிப்பிடவில்லை. பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. கேரவனில் கேமரா வைக்கிற சம்பவங்கள் கூட நடக்கிறது என்று சொல்கிறார்கள். இது என் மனைவி புதிதாக சொன்னதல்ல. ஹேமா கமிட்டியிலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள். இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கேரள நடிகர்கள் இதுகுறித்து நிரூபிக்க வேண்டியது அவர்களின் கடமை.

என்னை பொறுத்தவரை திரைத்துறை மட்டுமல்ல எல்லா துறைகளில் இது நடக்கிறது. பெண் காவலர்கள் கூட அடிக்கடி புகாரளிக்கின்றனர். இதில் இவர் செய்தாரா? அவர் செய்தாரா? என்று பார்ப்பதை விட இனி யாருக்கும் இதுபோன்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்கு என்ன செய்யவேண்டும் என்றுதான் யோசிக்க வேண்டும். எல்லா இடங்களிலும் பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மிக மிக அவசியம். இவ்வாறு சரத்குமார் கூறினார்.