கல்வியின் முக்கியத்துவத்தை பிள்ளைகளுக்கு பெற்றோர் எடுத்துரைக்க வேண்டும் என மலைவாழ்மக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூர் வட்டம் விளாங்குப்பம் ஊராட்சியில் மலைவாழ் மக்களுடன் ஆளுநரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர்ஆர்.என்.ரவிக்கு மலைவாழ் மக்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர், ஜவ்வாது மலையில் செயல்படுத்தப்படும் அரசின் திட்ட கண்காட்சி அரங்கை பார்வையிட்டார். பின்னர் அவர், மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசும்போது,”நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு கோடியே 20 லட்சம் நபர்கள் முத்ரா கடன் பெற்றுள்ளனர். மலைவாழ் மக்களிடையே கல்வி குறித்தான விழிப்புணர்வு அதிகம் இருக்க வேண்டும். பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும். கல்வியின் முக்கியத்துவம் குறித்து பிள்ளைகளுக்கு பெற்றோர் தெரிவிக்க வேண்டும். பெற்றோராகிய நீங்கள், ஒரு இடத்தில் படிப்பை நிறுத்தினாலும், உங்களுடைய பிள்ளைகள் படிப்பை நிறுத்தாமல் படிக்க வேண்டும். எதிர்காலம் சிறப்பாக இருக்க பிள்ளைகள் கட்டாயம் படிக்க வேண்டும். ஜவ்வாது மலை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஜவ்வாதுமலைக்கு மீண்டும் மீண்டும் வருவேன்” என்றார்.
முன்னதாக, ஜவ்வாது மலையில் விளைந்த பூசணிக்காய், சீதாப்பழம், விளாம்பழம், கொய்யாப்பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை ஆளுநருக்கு மலைவாழ் மக்கள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இனிப்புகளை வழங்கினார். பின்னர், விளாங்குப்பம் கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்ததோடு, ஜவ்வாது மலையில் அதிகளவு மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க வேண்டும் என மலைவாழ் மக்களை கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உணவு அருந்தினர்.