மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ராக்கெட் லாஞ்சர் கொண்டு தாக்குதல்!

மணிப்பூரில் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இப்படி இருக்கையில் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு மற்றும் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடந்திருக்கிறது.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது. இம்மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 5 கி.மீ தொலைவில் முதல் சம்பவம் நடந்திருக்கிறது. துப்பாக்கி ஏந்திய மர்ம நபர், அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். பின்னர் வீட்டிலிருந்து அனைவரையும் சுட்டு கொலை செய்திருக்கிறார். இதனையடுத்து இரண்டாவது சம்பவம் மாவட்ட தலைநகரில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் நடந்திருக்கிறது. இந்த சம்பவத்தில், இரண்டு ஆயுதம் ஏந்திய குழுக்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

அதேபோல மறுபுறம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் சிலர் தாக்குதலுக்கு ராக்கெட் லாஞ்சரை பயன்படுத்தியுள்ளனர். இங்குள்ள கிராமங்கள் மீது அதிகாலை 4.30 மணியளவில் ராக்கெட் லாஞ்சர்கள் வீசப்பட்டிருக்கின்றன. இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என போலீஸ் சந்தேகத்திருக்கிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், இம்பாலில், ட்ரோன்களை பயன்படுத்தி குண்டுகள் வீசப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து, தற்போது அடுத்தடுத்த தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது மணிப்பூர் மட்டுமல்லாது, நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த வன்முறை 16 மாதங்கள் கடந்த பின்னரும் அடங்கவில்லை. இதில் 220க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், 1,108 பேர் படுகாயமடைந்துள்ளனர், 32 பேர் காணவில்லை. பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக ஏறத்தாழ 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.