பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, அருள் ராமு உள்ளிட்ட 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம், திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை, கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரைத் தவிர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் சிறையில் இருந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமல்லாமல், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரன் சிறையில் இருந்த படியே கொலைத் திட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததும். வழக்கறிஞரும் ரவுடியுமான சம்பவம் செந்தில் கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து தலைமறைவாக இருக்கும் சம்போ செந்தில், சீசிங் ராஜா, மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபல ரவுடிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதில் சம்போ செந்தில் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கிறார்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரரான பொன்னை பாலு, அருள், சந்தோஷ்,ராமு, திருமலை உள்ளிட்ட 10 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே கொலை வழக்கில் 10 பேருக்கு குண்டர் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் ஏற்கனவே தலைமறைவாக இருக்கும் சம்போ செந்தில், உள்ளிட்டோரையும் கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வரும் நிலையில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.