தென்னிந்திய படங்களில் இருக்கும் தனித்துவம் என்ன என்பது குறித்து நடிகை தமன்னா பதிலளித்துள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழில் இவர் நடித்த ‘ஜெயிலர்’ மற்றும் ‘அரண்மனை 4’ உள்ளிட்ட படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது இந்தியில் ‘ஸ்ட்ரீ 2’ படத்தில் இவர் நடனமாடிய பாடல் யூடியூப் தளத்தில் மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார் தமன்னா. இது குறித்து இருவருமே வெளிப்படையாக அறிவித்துவிட்டார்கள்.
தன்னுடைய திரைத் துறை பயணம் குறித்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார் தமன்னா. அதில் தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரைத் துறைக்கு இருக்கும் வேறுபாடு குறித்து தமன்னாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில்: “தென்னிந்திய படங்கள் மக்களின் மனத்தில் வேரூன்றிய இருப்பிடங்களின் கதைகளை பற்றி அதிகம் பேசுகின்றன. அப்படி சொல்ல முயல்வதால் அவற்றின் உள்ளடக்கம் உலகளவில் மொழி பெயர்க்கப்படுகிறது என நினைக்கிறேன். அவர்கள் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் நிலைப்பாட்டில் இருந்து வேலை செய்யவில்லை.
மக்களின் பிரிவுகள், குடும்பத்தினரின் அடிப்படை மனித உணர்வுகளைச் சொல்கிறார்கள். பல்வேறு கதை சொல்லல் வடிவங்கள் மூலம் அடிப்படை மனித உணர்வுகளை சொல்ல முனைகிறார்கள். தங்களுடைய கண்ணோட்டத்தை மக்கள் மத்தியில் சரியாக கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். தங்களுடைய மக்களைத் தாண்டி பல்வேறு மக்களுக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கவில்லை. தங்களது மக்களுக்கு தெரிந்ததை மட்டுமே சொல்ல முயற்சிக்கிறார்கள். அது உண்மையில் தென்னிந்திய திரையுலகுக்கு வேலை செய்கிறது என நினைக்கிறேன்” என்று தமன்னா கூறியுள்ளார்.