நிலுவையில் உள்ள தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்சா அபியான்) கீழ், தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த, மத்திய கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாத மாநிலங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை மறுப்பது, அதே வேளையில் குறிக்கோள்களில் வெற்றியடையாதோருக்குத் தாராளமாக நிதி ஒதுக்குவது, இப்படித்தான் மத்திய பாஜக அரசு தரமான கல்வியையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதா, முடிவை நாட்டுக்கும், நாட்டு மக்களின் புரிதலுக்குமே விட்டுவிடுகிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் ஒரு விஷயத்தை உருவாக்கும் நோக்கில் ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு எதிராக இருப்பது அரசியல் சாசன உணர்வுக்கும் ஓர் ஒருங்கிணைந்த இந்தியாவுக்கும் எதிரானது. பல்வேறுகட்ட ஆலோசனைகளுக்குப் பின்னரே தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. அதில் இந்திய மக்களின் ஒட்டுமொத்த அறிவும் அடங்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான உங்களின் திட்டமிட்ட எதிர்ப்பில் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.
தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் கல்வி பயிற்றுவிப்பதை நீங்கள் எதிர்க்கிறீர்களா, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்துவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடத் திட்டத்தையும், பாடப் புத்தகங்களையும் உருவாக்குவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா, ஒட்டுமொத்த வளர்ச்சியையும், பல்துறை அறிவையும், எதிர்கால தேவையை நிறைவேற்றக் கூடியதாகவும் அமைந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறீர்களா? அப்படி இல்லாவிட்டால், உங்களின் அரசியல் லாபத்தை தள்ளிவைத்துவிட்டு தமிழக மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய-மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
உரிய மரியாதையுடன், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்களின் அன்பான கவனத்திற்கு,
1930கள் மற்றும் 60களின் வரலாற்று இயக்கங்களில் வேரூன்றிய இருமொழிக் கொள்கையின் மூலம் தமிழ்நாடு தனது மொழியியல் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் எப்போதும் உறுதியாக உள்ளது. தமிழை நமது அடையாளத்தின் தூணாக ஏற்றுக்கொள்கிறோம் அதே வேளையில் வருங்கால சந்ததியினர் ஆங்கிலப் புலமை பெற்றிருப்பதை உறுதிசெய்கிறோம்.
கேள்வி 1க்கான பதில்:
எங்களின் கொள்கையானது எப்பொழுதும் தமிழை அடிப்படையாக கொண்டு உள்ளடக்கிய கற்றலுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது, அதே நேரத்தில் மாணவர்களுக்கு ஆங்கில அறிவையும் மேம்படுத்துகிறது.
கேள்வி 2க்கான பதில்:
எங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சேர்ப்பில் சம நிலை மற்றும் உள்ளூர் மொழி தெரிந்திருப்பதை உறுதி செய்வதற்காக தமிழில் போட்டித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.
கேள்வி 3க்கான பதில்:
பொறியியல், மருத்துவம் போன்ற தொழில்நுட்பப் பாடங்களைக்கூட மொழிபெயர்த்து, தமிழில் கல்விப் பொருட்களை வெளியிடுவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
கேள்வி 4க்கான பதில்:
தமிழகத்தின் கொள்கைகள் ஏற்கனவே முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், நான்முதல்வன், இல்லம் தேடி கல்வி, தமிழ்ப் புதல்வன் மற்றும் என்னும் எழுத்து போன்ற திட்டங்களின் மூலம் முழுமையான மற்றும் உள்ளடக்கிய கொள்கைகளை பிரதிபலிக்கின்றன.
தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள பல்வேறு கூறுகளை தமிழ்நாடு ஏற்கனவே நடைமுறைப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்புகள் எல்லாம் மும்மொழி கொள்கை மற்றும் ‘NEP’ பாடத்திட்டத்தின் மாற்றங்கள் போன்ற குறிப்பிட்ட கூறுகளுடன் தொடர்புடையவையே. சமக்ர சிக்சா அபியான் நிதி வழங்குவதை ‘NEP’ உடன் இணைப்பது கல்வியில் மாநில அரசு கொண்டுள்ள சுயாட்சியை மீறுவதாகும்
எனவே ‘SSA’ திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தமிழ்நாட்டுக்கான நிதியை ‘NEP’ போன்ற எந்த நிபந்தனைகள் இல்லாமல் விடுவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.