மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதால், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செயற்கை சுவாசம் உதவியுடன் அவருக்கு தீவிர கிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி நேற்று பிற்பகல் 3.05 மணிக்கு காலமானார்.
சீதாராம் யெச்சூரி கடந்த 1952 ஆகஸ்ட் 12-ம் தேதி அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் (தற்போது சென்னை) பிறந்தவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) மாணவராக இருந்து, இந்திய மாணவர் கூட்டமைப்பில் (எஸ்எஃப்ஐ) உறுப்பினராக சேர்ந்தார். 1984-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார். 1992-ல்அக்கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான பொலிட்பீரோவுக்கு தேர்வு செய்யப்பட்டார். 2005 முதல் 2017 வரை 12 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாக பணியாற்றியவர். 2015-ல் நடந்த கட்சியின் 21-வது மாநாட்டில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இண்டியா கூட்டணியில் முக்கிய பங்கு வகித்தார். பொருளாதார நிபுணர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் யெச்சூரி. சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: மாணவர் தலைவர், தேசிய தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என தனித்துவமான செல்வாக்குமிக்க பொறுப்புகளில் இருந்தவர் சீதாராம் யெச்சூரி. தனது உறுதியான சித்தாந்தங்களால் கட்சிக்கும் அப்பாற்பட்ட நண்பர்களை பெற்றிருந்தார்.
பிரதமர் மோடி: மிகவும் திறமையான நாடாளுமன்ற உறுப்பினராக முத்திரை பதித்தவர் சீதாராம் யெச்சூரி. இடதுசாரிகளில் முக்கிய தலைவராக விளங்கியவர்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி: இந்தியாவின் சித்தாந்தங்களை பாதுகாப்பதில் அக்கறையுடன் செயல்பட்டார் யெச்சூரி. அவரது நீண்டகால நட்பை இழந்து தனிமரமாகி உள்ளேன்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் சீதாராம் யெச்சூரியின் மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இந்திய அரசியலில் அவர்வழங்கிய தாக்கம் நிறைந்த பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கல்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவரும், இந்திய அரசியலில் உயர்ந்தஆளுமையுமான சீதாராம் யெச்சூரியின் மறைவால் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். மாணவர் தலைவர் என்ற முறையில் நெருக்கடி நிலை பிரகடனத்துக்கு எதிராகதுணிச்சலுடன் நின்ற அச்சமற்ற தலைவர். தொழிலாளி வர்க்கம்,மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான சிந்தனைகளில் அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சீதாராம் யெச்சூரி காலமான செய்தியறிந்து துயருற்றேன். மாணவர் பருவம் முதலே முதலாளித்துவ கொடுமைகளை எதிர்த்து தொழிலாளர் நலனுக்காக பாடுபட்டவர். இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற்ற அவரது மறைவு நாட்டுக்கும், தொழிலாளர் வர்க்கத்துக்கும் பேரிழப்பாகும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று மிகச் சிறப்பாக செயல்பட்டவர் சீதாராம் யெச்சூரி. தேசிய அளவில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க பெரும் துணையாக இருந்தவர். அவரது மறைவு மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு பேரிழப்பு.
பாமக நிறுவனர் ராமதாஸ்: சீதாராம் யெச்சூரி காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். சமூகநீதிக்காக என்னுடன் தோள்நின்ற அவரது மறைவு எனக்குதனிப்பட்ட முறையில் இழப்பாகும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மாணவ பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அதன் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் போராளியாக பணியாற்றிய இவரின் மறைவு இடதுசாரிகளுக்கும், முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் பேரிழப்பு.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: சமூக,பொருளாதார, அரசியல் தளங்களில் இடதுசாரி சக்திகளும், கம்யூனிஸ்டுகளும் கடும் சவால்களை எதிர் கொண்டிருக்கும் இக்காலத்தில், ஆழ்ந்த மார்க்சிய அறிவும், தத்துவத் தெளிவும் கொண்ட சீதாராம் யெச்சூரியின் இழப்பு, ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு.
விசிக தலைவர் திருமாவளவன்: இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் சீதாராம் யெச்சூரியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் நேர்ந்த பேரிழப்பு.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: சீதாராம் யெச்சூரி காலமான செய்திகேட்டு வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: சீதாராம் யெச்சூரியின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய அரசியலுக்கே மிகப்பெரிய இழப்பாகும்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: இந்திய அரசியலின் ஜாம்பவான் சீதாராம் யெச்சூரியின் மறைவு செய்தியறிந்து வருத்தமுற்றேன். மாணவர் சங்க பிரதிநிதி முதல் கட்சி தலைவர் வரையிலான அவரது அரசியல் பயணத்தில் தனது அழியாத முத்திரையை பதித்தவர். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
தவெக தலைவர் விஜய்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவு செய்தி கேட்டு மிகவும்வருத்தமடைந்தேன். முற்போக்கு அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அரசியல்வாதியாக, பொருளாதார நிபுணராக, எழுத்தாளராக பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்த சீதாராம் யெச்சூரியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
இதேபோன்று, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி, திக தலைவர் கி.வீரமணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், வி.கே.சசிகலா,தமிழ்நாடு தலைமைச் செயலகசங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள் பல்வேறு அமைப்புகள் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர். வீர வணக்கம் செலுத்திய பிறகு யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது.