பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
பணிநிரந்தரம் கோரி 13 ஆண்டுகளாக போராடி வரும் பகுதிநேர ஆசிரியர்களை அலைக்கழிக்கும் தி.மு.க. அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
“பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றிவரும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற தி.மு.க.வின் 181-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நூற்றுக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2012-ம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்ட தங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு கடந்த மூன்றாண்டுகளாக நடைபெறும் ஒவ்வொரு போராட்டத்தின்போதும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி ஆசிரியர்களை அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதிகளை அள்ளி வீசுவதையும், ஆட்சிக்கு வந்த பின்பு அதை நிறைவேற்ற மறுப்பதையுமே வாடிக்கையாக கொண்டிருக்கும் தி.மு.க. அரசால் பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினருமே வீதிக்கு வந்து போராடும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.
எனவே, குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கையான பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.