உண்மையையும், சத்தியத்தையும் யாராலும் மறைக்க முடியாது: சீமான்!

கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம் வருத்தம் தெரிவித்திருந்தாலும் அவருடைய கேள்வியில் உள்ள உண்மையையும், சத்தியத்தையும் யாராலும் மறைக்க முடியாது என்றும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

கோவையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து எழுப்பி கேள்விகள் தொடர்பான வீடியோ, அதேசமயம் அவர் மன்னிப்பு கேட்ட வீடியோ என தொடர்ந்து வைரலாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் பேசு பொருளாக இருந்த இந்த பிரச்னை, தற்போது கொங்கு கள அரசியலில் தாக்கத்தை ஏற்படத்த தொடங்கியுள்ளது. இதையடுத்து, லண்டனில் இருந்த அண்ணாமலையே மன்னிப்பு கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

கோவை அன்னபூர்ணா உரிமையாளரின் கேள்வியில் உள்ள உண்மை உங்களுக்குத் தெரியும். சரக்கு மற்றும் சேவை வரியால் வர்த்தகர்கள், வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சட்டை முதல் கடிகாரம் வரை எல்லாவற்றும் வரி. ஒரு மனிதன் வீடு கட்ட நினைத்தால் கூட வரிதான் கட்ட முடியும். மக்கள் வாழவே முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டனர். அதைத்தான் அவர் கேட்கிறார். அந்தக் கேள்வி நியாயம் என்பது நாடெங்கிலும் பரவி விட்டது. அதை அதிகாரம் பணிய வைக்கிறது. சீனிவாசன் வருத்தம் தெரிவித்தாலும் அவருடைய கேள்வியில் உள்ள உண்மையையும் சத்தியத்தையும் யாராலும் மறைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.