திமுக ஆட்சிக்கு எந்த இடையூறு வந்தாலும் அதை தடுக்கும் போர்வாள் மதிமுக: வைகோ!

திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் எந்த இடையூறு வந்தாலும், அதை தடுக்கின்ற போர்வாளாக மதிமுக இயங்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, பொருளாளர் செந்திலதிபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது பேசிய வைகோ கூறியதாவது:-

திராவிட இயக்கத்தை சாய்த்துவிடலாம் என சங் பரிவார் கூட்டம் எத்தனை முயற்சிகள் செய்தாலும் திராவிட இயக்கத்தைச் சாய்க்க முடியாது. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். 2022ல் பிரயாக்ராஜில் இந்துத்துவவாதிகள் ஒரு மாநாட்டை நடத்தினார்கள். அவர்கள் அங்கு எடுத்த முதல் தீர்மானம் இந்தியா என்று அழைக்கக்கூடாது, அந்தப் பெயரை எடுத்துவிட வேண்டும் என்பதுதான். முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஓட்டுரிமை கிடையாது, இந்திதான் முதன்மை மொழியாக இருக்கும் என தீர்மானித்துள்ளனர். அவர்களின் இந்தக் கோட்பாடுகளையெல்லாம் எதிர்க்க தமிழ்நாட்டில் இருக்கும் இந்த ஆட்சிதான் அனைவரும் எதிர்பார்ப்பது. மதச்சார்பின்மையைப் பாதுகாக்க இந்த ஆட்சி அவசியம். திராவிட இயக்கத்தை ஒழித்துக் கட்டி விட வேண்டும் என இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. நம் தொண்டன், ஆயிரம் பேருக்குச் சமம். இந்த அமைப்பின் வலுவை திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடர்ந்து வழங்கவேண்டும். இது கூட்டணி என்ற பேச்சு அல்ல. திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் எந்த இடையூறு வந்தாலும், அதை தடுக்கின்ற போர்வாளாக மதிமுக இயங்கும் என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தமிழ்நாட்டில் பிஎச்.டி படிப்பில் தரம் இல்லை என தமிழக ஆளுநர் கூறியது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த வைகோ, “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை போன்ற தற்குறி வேறு யாரும் இருக்க முடியாது. அவரை போன்ற ஒரு மோசமான ஆளுநர் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தினமும் கண்டதை உளறிக் கொண்டிருக்கிறார். முந்தைய ஆளுநரை எதிர்த்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். தேவைப்பட்டால் இந்த ஆளுநரையும் எதிர்த்து போராட்டம் நடத்துவோம்” என்றார்.