மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய அரசாணைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்- அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கடந்த மூன்று ஆண்டு தி.மு.க. ஆட்சியில், விவசாய பெருங்குடி மக்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், வணிகர்கள், இளைஞர்கள், மாணவ-மாணவியர் என அனைத்துத் தரப்பினரும் வேதனையில் ஆழ்ந்துள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகளும் தங்களை தி.மு.க. அரசு புறக்கணிப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது மிகுந்த வேதனை அளிக்கும் செயல் ஆகும்.
மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு அரசாணைகளை வெளியிட்டுள்ள தி.மு.க அரசு, எந்தவொரு ஆணையையும் செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டினை தமிழக மாற்றுத் திறனாளிகள் சட்டப் பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர். அரசு வளாகங்களில் ஆவின் பாலகம் அமைக்க இடம் ஒதுக்குவது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்கள் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டைகளில் ஐந்து விழுக்காடு இடம் ஒதுக்குவது, சாலையோரங்களில் தள்ளுவண்டி வாயிலாக தொழில் செய்ய உதவுவது, மாதாந்திர உதவித் தொகையை மூவாயிரம் ரூபாயாக உயர்த்துவது, பகுதி நேர மாற்றுத் திறனாளி ஆசிரியர்களை நிரந்தரம் செய்வது உள்ளிட்ட அனைத்து அரசாணைகளையும் தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை என்றும், கடந்த ஆட்சியின் போது போராடிய மாற்றுத் திறனாளி சங்க நிர்வாகிகளை மாற்றுத் திறனாளி நலத் துறையின் உறுப்பினர்களாக்கி தி.மு.க. அரசு வஞ்சிப்பதாகவும், இந்த நிலை நிடித்தால் அனைத்து சங்கங்களுடன் இணைந்து போராடுவோம் என்றும் தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்டப் பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளின் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படுவதாகவும் அதற்கென தனித் துறையை உருவாக்கியுள்ளதாகவும் முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் துறை உள்ளது என்று கூறுவதும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், நல வாழ்வினை உறுதி செய்தல், சம வாய்ப்பினை உறுதி செய்தல், கயமரியாதையுடன் வாழ்வதை உறுதிப்படுத்துதல் போன்ற இலக்குகளுடன் அரசு செயல்படுவதாக கூறுவதும் வெறும் காகிதத்தில் இருந்தால் மட்டும் போதாது. அவைகள் எல்லாம் செயல்பாட்டிற்கு வரவேண்டும். அரசாணைகளை வெளியிட்டால் மட்டும் போதாது, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். ஆனால் இவற்றை செய்ய திமுக அரசு தவறிவிட்டதாக மாற்றுத் திறனாளிகளே தெரிவிக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக்கூட மனமில்லாத சுல்நெஞ்ச அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. தி.மு.க அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய அரசாணைகளை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.