“எங்களுடன் சேர்ந்தால் நாட்டு மக்கள் நல்லா இருப்பார்கள் என நினைப்பவர்கள் கூட்டணி வைக்கலாம்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும், ‘திமுக தேர்தலில் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியுமா?’ என்று அவர் கேள்வி எழுப்பினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று (செப்.16) செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது:-
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை கூறுகிறது. கேரள மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது இல்லையா? இங்கு மீனவர்கள் என்பது பிரச்சினை அல்ல; தமிழன் என்பதுதான் பிரச்சினை. மற்ற மாநிலத்தவரை மொட்டை அடித்திருந்தால் இந்த நாடும், அரசும் சும்மா இருக்குமா? இது தமிழக மீனவர்களுக்கு அடித்த மொட்டை இல்லை. மத்திய – மாநில அரசுகளுக்கு அடித்த மொட்டை. தமிழகத்தில் 39 எம்பி-க்கள் இருந்தும் என்ன பிரயோஜனம்? கச்சத்தீவை மீட்க வழியில்லை.
திமுக தேர்தலில் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியுமா? கூட்டணியில் வெற்றி பெற்றதை தனிப் பெரும்பான்மை என்று கூறுவது சரியில்லை. திருமாவளவன் கோட்பாட்டை பாராட்டுகிறேன். மத்திய ஆட்சியில் மட்டும் கூட்டணிக்கு பங்கு. மாநில ஆட்சியில் கூட்டணிக்கு பங்கு கிடையாதா? முதல்வராக இருந்து கொண்டே கெஜ்ரிவால் போராடியிருக்கலாம். மத்திய அரசால் அவர் பழி வாங்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமே. அண்ணா, ராஜாஜி, காமராஜர் ஆட்சி காலத்தில் மதுவிலக்கு இருந்தது. மதுவிலக்கை நீக்கியது கருணாநிதி. கொரோனா காலத்தில் மதுக் கடைகள் மூடப்பட்டதால் யாரும் இறந்தார்களா?
அந்நிய முதலீடு கொண்டு வந்தது தலைவருடைய வேலையா? இது தரகு வேலை. பணம் மட்டும் கொடுக்கவில்லை என்றால் எங்களை தேர்தலில் வீழ்த்த முடியாது.என் மீது 138 வழக்குகள் உள்ளன. நான் தனித்துப் போட்டியிடுகிறேன். என்னுடன் கூட்டணி வைக்க வேறொருவர்தான் முடிவெடுக்க வேண்டும். எங்களுடன் சேர்ந்தால் நாட்டு மக்கள் நல்லா இருப்பார்கள் என்று நினைப்பவர்கள் கூட்டணி வைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.