தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிற மதங்களைப் போலவே இந்துக்களின் மத உணர்வையும் மதிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் சிஎஸ்ஐ இமானுவேல் ஆலயம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரின்ஸ் கால்வின் என்பவர் பாதிரியாராக இருந்து வருகிறார். தேவாலயத்தில் நடத்தப்படும் பிரார்த்தனை கூட்டங்கள் அனைத்தும் தேவாலயத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பப்படுவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் அங்கு ஆராதனை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது, இந்து மற்றும் கிறிஸ்துவ சமூகங்களிடையே பகைமையை ஊக்குவிக்கும் விதமாக பிரின்ஸ் கால்வின் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிரியார் பிரின்ஸ் கால்வின் பேசியதற்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். புகாரின் பேரில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது சாதி, மத, இனங்களிடையே விரோத உணர்ச்சியை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “நான் பேசிய கருத்து இந்து சகோதரர்கள் மனதை புண்படுத்தியுள்ளது. இதனால் ஒரு சிலர் அந்த கருத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். என்னுடைய நோக்கம் எவரையும் புண்படுத்துவது இல்லை. கலாச்சார சீரழிவு மற்றும் சாதி ஏற்றத்தாழ்வு குறித்து நான் பேசினேன். என்னுடைய பேச்சால் புண்பட்ட இந்து சகோதர, சகோதரிகளிடம் நான் முழு மனதளவில் என்னுடைய வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரின்ஸ் கால்வின் மன்னிப்பு கேட்டால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதில்லையா? அவரை ஏன் கைது செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பி உள்ளார் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிற மதங்களைப் போலவே இந்துக்களின் மத உணர்வையும் மதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் வானதி சீனிவாசன். இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
அனைத்து மதத்தினரும் சகோதரத்துவ உணர்வுடன் பழகிவரும் நமது தமிழகத்தில், மதக் கலவரங்களைத் தூண்டும் கருத்துக்கள் கடும் கண்டனத்திற்குரியது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால், கோவையைச் சேர்ந்த பாதிரியார் பிரின்ஸ் கால்வின், இந்து மதத்தினரை மிகவும் மோசமான வார்த்தைகளால் சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்திருந்த காணொளி வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்துக்களின் மீது மத வெறுப்புணர்வை விதைக்கும் அவரின் கருத்துக்களுக்கு எதிராக பல புகார்கள் அளிக்கப்பட்டு, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது திமுக அரசு மற்றும் தமிழக காவல்துறை. தனது தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்டதாகவே இருந்தாலும், ஒருவரின் மத நம்பிக்கைகளைக் காயப்படுத்திவிட்டு, “மன்னிப்பு” என்ற வார்த்தையால் அனைத்தையும் மறக்கடிக்க முடியாது என்பதுதான் உண்மை. மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஒரு குற்றவாளி கேட்கும் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றங்களே தவிர, மாநில நிர்வாகம் அல்ல.
குற்றம் சுமத்தப்பட்டவரைக் கைது செய்து, நீதிமன்றம் முன்பு நிறுத்துவது தான் ஒரு அரசின் தார்மீக கடமை. எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிற மதங்களைப் போலவே இந்துக்களின் மத உணர்வையும் மதித்து, அவர்களைப் பற்றி கொச்சையான கருத்துக்களைப் பேசிய கோவை பாதிரியார் திரு. பிரின்ஸ் கால்வினைக் கைது செய்து, அவருக்கு தகுந்த தண்டனைக் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.