தயவுசெய்து பெயரின் பின்னால் சாதி பெயரை சேர்க்காதீங்க: கனிமொழி

தயவுசெய்து பெயரின் பின்னால் சாதிப் பெயரை சேர்க்காதீர்கள். நாம் எல்லோரும் மனிதர்கள், சமமானவர்கள். நாம் எல்லாரும் உழைப்பை நம்பக் கூடியவர்கள். அதனால் இப்படி சாதி பெயரைப் போட வேண்டாம் என கனிமொழி எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கத்தின் சார்பில், வியாபாரிகளுக்கான கட்டட திறப்பு விழா, விடுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு, பெருந்தலைவர் காமராஜர் சிலை திறப்பு நிகழ்ச்சி ஆகியவை இன்று நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் கனிமொழி எம்.பி, பேசியதாவது:-

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரிடம் அவர் படித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், வகுப்பில் இருந்த மாணவர்கள், ‘நீங்கள் ஏன் தமிழ்நாடு என தனியாகவே இருக்கிறீர்கள். எங்களுடன் இணைந்து செயல்பட மறுக்கிறீர்கள்?’ என கேட்டுள்ளனர். அதற்கு அவர், வகுப்பில் இருந்த பெயர்ப் பட்டியலை எடுத்துக் காட்டி, “உங்களது பெயரையும் பாருங்கள். எங்களது பெயரையும் பாருங்கள். எங்கள் பெயருக்கு பின்னால் எங்களது தந்தை பெயரோடு நிறுத்திக் கொண்டோம். ஆனால், உங்களது பெயரைப் பார்த்தால் நீங்கள் எந்த ஜாதி, எந்த ஊர் என்பதெல்லாம் வெளிப்படையாகத் தெரிகிறது” என தெரிவித்துள்ளார்.

இது தந்தை பெரியார் மண். பேரறிஞர் அண்ணா மண். கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் மண். கலைஞருடைய மண். இந்த மண்ணில் சாதி, மதம் என்ற எந்த வேறுபாடுகளும் இருக்கக்கூடாது. இந்த விழா அழைப்பிதழில் பலரின் பெயர்களுக்குப் பின்னால் சாதி பெயர் உள்ளது. தயவுசெய்து இன்னொரு அழைப்பிதழில் இத்தனை சாதிப் பெயர்களோடு அடிக்காதீர்கள். நாம் எல்லாம் மனிதர்கள். அத்தனையும் தாண்டி உழைப்பாளிகள். அதை மட்டுமே நம்பக்கூடியவர்கள். இதை எனது வேண்டுகோளாக இங்கே வைக்கிறேன். இணைந்து செயல்படுவோம்., தமிழர்களாக உயர்ந்து நிற்போம். இவ்வாறு அவர் பேசினார்.