அன்னபூர்ணா விவகாரம் அரசியல் களத்தில் இன்னும் விவாத பொருளாக உள்ளது. இந்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் அடக்கத்துடன் இருந்திருக்க வேண்டும் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியிருந்தார். அதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், “உங்களின் கருத்து சோனியா காந்திக்கும் பொருந்துமா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் விவகாரம் இன்னும் ஓயவில்லை. இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம் என அன்னபூர்ணா ஹோட்டல் கூறிவிட்டது. ஆனால், அரசியல் ரீதியாக இந்தப் பிரச்னை தொடர் விவாதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்து, வீடியோ எடுத்து வெளியில் விட்டது கேவலமான விஷயம். மன்னிப்பு கேட்கும்போது நிர்மலா சீதாராமன் எந்த உணர்வும் இல்லாமல் கல்லை போல இருந்துள்ளார். சக மனிதனை மதிக்கும் மனிதத் தன்மை நிர்மலா சீதாராமனிடம் இல்லை. பெண் அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும், பணிவும் வேண்டும். அது எதுவுமே அவரிடம் இல்லை. குறைகளை சொல்வதற்காகதான் தொழில் நிறுவனங்கள் அங்கு வந்திருந்தனர். அவர் சொன்ன ஜிஎஸ்டி பிரச்னை எல்லோருக்கும் தெரியும். அவர் ஜிஎஸ்டியை நீக்குங்கள் என்று கூட சொல்லவில்லை. முறைப்படுத்துங்கள் என்றுதான் சொல்கிறார். பாஜவுக்கு எதிராக அரசியல் கட்சிகள், பொது மக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். இது வரும் நாள்களில் பெரியளவுக்கு வெடிக்கும்.” என்று கூறியிருந்தார்.
இதில் நிர்மலா சீதாராமன் குறித்து தெரிவித்த கருத்துக்கு இளங்கோவனுக்கு பாஜக தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது. இதுகுறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
பெண்களை அடிமைகளாக முன்னிறுத்த முயலும் உங்கள் பிற்போக்குத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தியாவின் நிதி பொருளாதாரத்தை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்பில் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பார்த்து, ‘ஒரு பெண் அமைச்சருக்கு அடக்கமும் பணிவும் தேவை’ என்று நீங்கள் கூறுவது, நமது நாட்டில் சம உரிமையும் அரசியல் அதிகாரமும் பெரும் பெண்களைப் பார்த்தால் உங்களுக்கு எத்தனை வயிற்றெரிச்சலாக இருக்கிறது என்பதைக் கோடிட்டு காட்டுகிறது.
ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுக்க நீங்கள் யார்?. அரசு பொறுப்பிலிருக்கும் ஒரு பெண்ணையே சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சிக்கும் நீங்கள் ஆட்சிக்கு வந்தால், சாமானிய பெண்களை எப்படி நடத்துவீர்கள்? அரசியல் அதிகாரமிக்க பொறுப்பில் உள்ள ஒரு பெண்ணுக்கு அடக்கம் தேவை என்ற உங்களின் கூற்று, உங்கள் கட்சியைச் சார்ந்த சோனியா காந்தி உட்பட அனைத்து காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி பெண் தலைவர்களுக்கும் பொருந்துமா?
ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல், பெண்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நீங்கள் இப்படி பேசுவது ஒன்றும் வியப்பல்ல. எனவே, மதிப்புமிக்க பொறுப்பில் இருக்கும் நமது மத்திய நிதியமைச்சரைப் பற்றி பொதுவெளியில் நீங்கள் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு, உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.