திமுக கூட்டணியை சிதறடிப்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகரில் பல்வேறு இடங்களில் விடுலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்துகொண்டு சத்திரரெட்டியபட்டி, அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, அம்பேத்கர் படிப்பகம், கே.கே.எஸ்.எஸ்.என். நகர், அண்ணா நகர், அரசு மருத்துவமனை, புதுத்தெரு, கம்மாபட்டி தெரு ஆகிய இடங்களில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கம் சார்பில் நடைபெற்ற 5வது மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டத்தில் பங்கேற்று “அறிந்துகொள்வோம் இந்திய இறையாண்மையை” என்ற தலைப்பில் பேசினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நெடுஞ்சாலைத்துறையில் பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் செய்யப்படுகிறது. இதனால், இளைய தலைமுறையினரின் வேலைவய்ப்பு பறிபோகிறது. இந்தக் கூட்டத்தின் 12 கோரிக்கைகளையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
அக்.2ம் தேதி உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மகளிர் மாநாடு நடைபெறுகிறது. தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் ஒரே நேரத்தில் முக்கியமான இரு கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம். அரசமைப்புச் சட்டம் 47-ன் படி மது ஒழிப்பு ஆலோசனைக் குழு 1954ல் அமைக்கப்பட்டு, அந்த குழு ஏராளமான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. மத்திய அரசே மது ஒழிப்புக்கான தேசிய கொள்கையை வரையறுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது. அதனால்தான் மத்திய அரசுக்கும் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.
தமிழக அரசும் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். பாஜக ஆளும் உத்திரப்பிரதேசத்தில் மதுவிலக்கு இருக்கிறதா? இந்த கேள்விக்கு பாஜகவினர் பதில் அளித்தார்களா? குஜராத்தில் மது விலக்கு நடைமுறையில் உள்ளது. அது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. காந்தியடிகளை மதிக்கும் வகையில் குஜராத்தில் மட்டும் அது நடைமுறையில் உள்ளது.
ஆனால், பாஜக ஆளும் எந்த மாநிலத்திலும் மதுவிலக்கு கொள்கை இல்லை. இதனால் கடுமையாக பாதிக்கப்படுவது, இவர்கள் மொழியில் சொல்லப் போனால் இந்துக்கள்தான். இளம் தலைமுறையினர் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இளைஞர்களைப் பாதுகாக்க பாஜக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மாநில அரசு மீது பழிபோட்டுவிட்டு மத்திய அரசு கண்டும் காணாமல் உள்ளது.
தமிழகத்தில் நாங்கள் ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும், அரசுக்கு நெருடலை ஏற்படுத்தும் பிரச்சினையை கையில் எடுத்துள்ளோம். இதையே அவர்கள் கேலி செய்கிறார்கள் என்றால் அவர்கள் நோக்கம் மக்கள் நலன் அல்ல. திமுக கூட்டணியை சிதறடிப்பதாகத்தான் உள்ளது. விஜய் மாநாடு நடத்துவதை வரவேற்கிறேன். அவருக்கு எனது வாழ்த்துகள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை கடுமையாக எதிர்க்கிறோம். குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவர அவர்கள் முயற்சிக்கிறார்கள். கமல் மீண்டும் மக்கள் நீதி மையத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்காக வாழ்த்துகிறேன்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் அரியனேந்தன் போட்டியிட்டார். அவருக்கு வாக்களிக்க வேண்டும் என நான் தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அவர் வெற்றிபெற முடியாது என்பது தெரியும். இருந்தாலும் அவரை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினேன். தற்போது ஏவிபி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தேர்தெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தமிழர்களுக்கு ஆதரவானவர் என்று சொல்ல முடியாது. காத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.