சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமரியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

சென்னையில் 10 இடங்களிலும், நாகர்கோவிலில் ஒரு இடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.. சென்னை, கன்னியாகுமரி மற்றும் புதுக்கோட்டையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கை, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வந்தனர். இதனிடையே, இந்த வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டதைடுத்து, இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றி வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தும், என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், சென்னை ராயப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட “ஹிஸ்புத் தஹ்ரிர்” என்ற அமைப்புக்கு ஆதரவாக ஆள்சேர்ப்பில் ஈடுபட்டதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருந்தனர். டாக்டர் ஹமீது உசேன், அவருடைய அப்பா மன்சூர், அவருடைய சகோதரர் அப்துல் ரஹ்மான், நண்பர்கள் முகமது மாரிஸ், காதர் நவாப் ஷெரீப், முகமது அலி உமாரி ஆகிய 6 பேரையும் பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், சென்னையில் இன்று 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகர்கோவிலில் ஒரு இடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.. சென்னையில் தாம்பரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பான சோதனையில் ஈடுபட்டு வருகிறாரகள். தமிழகத்தின் பல்வேறு இடங்களில், அதுவும் காலையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.