‘முடா’ நில முறைகேடு தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் வழங்கிய அனுமதி சரி என இன்று உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதுதொடர்பாக சித்தராமையாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையா உள்ளார். கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் துணை முதல்வராக உள்ளார். கடந்த ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து முதல்வர் பதவியை கைப்பற்ற சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. நீண்ட இழுபறிக்கும் பிறகு தான் சித்தராமையா முதல்வராக அறிவிக்கப்பட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ் வெல்ல டிகே சிவக்குமார் மிகவும் முக்கிய தலைவராக இருந்ததோடு, பிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்படும் குழப்பங்களை அவர் தீர்த்து வைப்பதோடு, பாஜகவினர் கூண்டாக காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க முயலும்போதெல்லாம் டிகே சிவக்குமார் தான் அவர்களை தனது கட்டுப்பாட்டில் தங்க வைத்து பாதுகாப்பாக அனுப்பி வருகிறார். ஆனாலும் அவருக்கு முதல்வர் பதவியை தப்பியது. இதற்கு டிகே சிவக்குமாருக்கு எதிராக இருக்கும் சொத்து குவிப்பு உள்ளிட்ட சில வழக்குகள் தான் காரணம். இதனால் தான் ஊழல், முறைகேடு புகாரில் சிக்காத சித்தராமையாவுக்கு கடந்த ஆண்டு முதல்வர் பதவியை காங்கிரஸ் மேலிடம் வழங்கியது. இதில் டிகே சிவக்குமார் உள்பட அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் அவரை காங்கிரஸ் மேலிடம் சமாதானம் செய்து வைத்தது.
இந்நிலையில் தான் தற்போது சித்தராமையா பெரிய சிக்கலில் சிக்கி உள்ளார். அதாவது சித்தராமையா மைசூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இதற்கிடையே தான் கர்நாடகாவில் ‛முடா’ எனும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியம் சார்பில் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சித்தராமையாவின் பங்கு உள்ளதாக புகார் எழுந்தது. இதனை சித்தராமையா மறுத்த நிலையில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் செய்தது. இந்த புகாரை பெற்ற ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முடா முறைகேடு புகார் தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கினார். இது சித்தராமையாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து தன்மீது வழக்கு பதிய ஆளுநர் தாவர்சந்த் கெலாட் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி சித்தராமையா கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசண்ணா விசாரித்து தீர்ப்பு வழங்கினார். அப்போது ‛முடா’ முறைகேடு தொடர்பாக தனிநபர் மீது விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு முழு உரிமை உள்ளது. இதனால் அவரது உத்தரவில் தவறு இல்லை எனக்கூறி சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார். இது சித்தராமையாவுக்கு பிரச்சனையாக மாறி உள்ளது.
சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையில் இதற்கு முன்பு விலையுயர்ந்த வாட்ச் கட்டிய விஷயத்தில் சர்ச்சையில் சிக்கினார். அதன்பிறகு அதனை கருவூலத்தில் ஒப்படைத்தார். இருப்பினும் அவர் மீது எந்த ஊழல், முறைகேடு புகாரும் வந்தது இல்லை. தற்போது ‛முடா’ முறைகேடு புகார் மற்றும் அதுதொடர்பாக ஆளுநரின் உத்தரவு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த உத்தரவால் பாஜகவினர் சித்தராமையாவை ராஜினாமா செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபடலாம். இது காங்கிரஸ் மேலிடத்துக்கு பிரச்சனையாக மாறலாம். இதனால் கடந்த ஆண்டு முதல்வர் பதவியை மிஸ் செய்த டிகே சிவக்குமாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். சித்தராமையா விவகாரம் பூதாகரமாகும்பட்சத்தில் முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தால் அந்த பொறுப்பு டிகே சிவக்குமாருக்கு தான் செல்லும் என்பதால் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.