அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் இன்று (செப்.24) பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அமைச்சரவை மாற்றம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது” என்று தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கோருவது பற்றி முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதல்வர் ஸ்டாலின், “வெளிநாட்டு முதலீடுகள் குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஏற்கெனவே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அதுவே வெள்ளை அறிக்கைதான். வெளிநாட்டு முதலீடுகள் ஏதும் ஏமாற்றும் திட்டங்கள் அல்ல. அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என்பது எனக்குத் தெரியாதா!” என்றார்.

முன்னதாக, தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் 17 நாட்களில் 25 நிறுவனங்களுடன் மேற்கொண்ட சந்திப்பில் ரூ.7,618 கோடி மதிப்பிலான 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 11,516 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தொழில் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை கோரி வருகின்றன. இந்நிலையில்தான் முதல்வர் அது தொடர்பான கேள்விக்கு இவ்வாறாக பதில் அளித்துள்ளார். அதேபோல், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.