அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாவைக் கொள்கைக் கூட்டணியுடன் கொண்டாடுவோம் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
திமுகவை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவை நமக்குத் தந்த காஞ்சி மண்ணில் மற்றொரு விழாவுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா எந்த லட்சியத்திற்காக தி.மு.க.வை தொடங்கினாரோ, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அரும்பாடுபட்டு தி.மு.க.வை கட்டிக்காத்தாரோ அந்த லட்சியத்தை அடைவதற்கும், இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நெறிமுகறைகளைக் காப்பதற்கும் தொடர்ந்து தொண்டாற்றி வரும் தி.மு.க. இன்னும் ஒரு நூற்றாண்டு காலத்திற்குத் தன் பயணத்தை வலுவுடன் தொடர்ந்திட நாம் பயணிக்க வேண்டிய பாதையைப் பவள விழாவில் சுட்டிக்காட்டிப் பேசினேன்
தமிழ், தமிழர், தமிழ்நாடு என திமுக முழக்கத்தை வைத்தபோது, அது குறுகிய கண்ணோட்டம் என்று கருதியவர்கள் உண்டு. ஆனால் இன்று மொழி, இனம், மாநில உரிமை என அந்த முழக்கம் விரிவான பொருளைத் தருவதுடன், தமிழைப் போல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும், தமிழரைப் போல இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இனமும், தமிழ்நாட்டைப் போல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதே பன்முகத்தன்மையும், மதநல்லிணக்கமும் கொண்ட ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்பதை அனைத்து மாநில மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். இதுதான் 75 ஆண்டுகால தி.மு.க.வின் இந்திய அளவிலான தாக்கம். இதனை எடுத்துச் சொல்ல ஒரு பவள விழா போதாது. திசையெங்கும் விழா எடுக்க வேண்டும்; தி.மு.க.வுடன் இணைந்து கொள்கைக் கூட்டணி அமைத்துள்ள இயக்கத்தினரையும் இணைத்து விழா எடுக்க வேண்டும் என்பதால்தான் செப்.28ம் நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் பவள விழா கொண்டாடப்படுகிறது.
காஞ்சியில் நடப்பது கொள்கை உறவுகளுடனான திருவிழா. இங்கே தோழமைக் கட்சியினர் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கிறார்கள். மாநில உரிமைகளை மறுக்கும் மத்திய அரசுடன் நமக்கான ஒவ்வொரு உரிமைக்காகவும் போராடித்தான் ஆக வேண்டியுள்ளது. போராட்டமே தி.மு.க.வின் வலிமை. ஆட்சியதிகாரம் இருந்தாலும் உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதி கோரி செப்.26, 27 ஆகிய நாட்களில் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்றிட மத்திய அரசு தர வேண்டிய நிதியை வலியுறுத்திப் பெறவிருக்கிறேன்.
செப்.28ம் தேதி ராணிப்பேட்டை, பணப்பாக்கத்தில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ.9,000 கோடி மதிப்பில், 400 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் டாடா மோட்டார் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட்ரோவர் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு டாடா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சந்திரசேகரன் முன்னிலையில் அடிக்கல் நாட்டவிருக்கிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் தி.மு.க. அரசின் கொள்கைகள் இன்று இந்தியா முழுமைக்கும் வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள நிலையில், ராணிப்பேட்டை நிகழ்வினை முடித்துக்கொண்டு, தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் காஞ்சிக்கு வருகிறேன். நான் மட்டுமல்ல, தி.மு.க. தொண்டர்களான உங்கள் அனைவரையும் வாஞ்சையோடு அழைக்கிறது காஞ்சி. அண்ணா பிறந்த மண்ணில் அணிவகுப்போம், கொள்கைத் தோழமைகளுடன் எழுச்சியுடன் கொண்டாடுவோம் கழகத்தின் பவள விழாவை.! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.