முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை செந்தில் பாலாஜி சந்தித்து பேசினார்.
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் வெளியே வந்தார். இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு விதித்த நிபந்தனைகளின்படி நேற்று காலை அமலாக்கத்துறை முன் ஆஜரான செந்தில் பாலாஜி பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
இந்த நிலையில், டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை செந்தில் பாலாஜி நேரில் சந்தித்தார். சென்னை விமான நிலையத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி அவரிடம் வாழ்த்து பெற்றார்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில். ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.!. தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் (முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்) காலடியில் சமர்ப்பணம். உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.