அரசு ஊழியர்கள் விமான பயணம் மேற்கொள்ள மத்திய அரசு புது உத்தரவு!

தேவையற்ற செலவினங்களை குறைக்கும் வகையில், விமான பயணம் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு பல புதிய நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேவையற்ற செலவினங்களை குறைப்பதற்கான முயற்சியில், மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அரசு பணிக்காக அல்லது எல்.டி.சி., எனப்படும் விடுமுறை பயணச் சலுகையின் கீழ் விமான பயணம் மேற்கொள்வதில், ஊழியர்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

விமான பயணத்துக்கான டிக்கெட்டுகளை, மூன்று வாரங்களுக்கு முன்பாக வாங்க வேண்டும். அந்த சமயத்தில் அவற்றின் விலை குறைவாக இருக்கும்; இதனால் செலவு குறையும். அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மூன்று நிறுவனங்கள் வாயிலாகவே முன்பதிவு செய்ய வேண்டும். மற்ற நிறுவனங்கள் மூலம் டிக்கெட் வாங்குவதை தவிர்க்கவும். பயண நேரத்துக்கு, 72 மணி நேரத்துக்குள்ளாக வாங்கப்படும் டிக்கெட் மற்றும் பயண நேரத்துக்கு, 24 மணி நேரத்துக்குள்ளாக டிக்கெட் ரத்து செய்யப்படுவதற்கு, உரிய காரணங்களை தெரிவிக்க வேண்டும். டிக்கெட் ரத்து செய்யப்படுவதை தவிர்ப்பது நல்லது. அதற்கேற்ப பயண திட்டத்தை வகுத்து கொள்ள வேண்டும். அரசு அங்கீகரித்துள்ள டிராவல் ஏஜன்ட் நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகைகளை அனைத்து அமைச்சகங்கள், துறைகள், வரும், ஆக., 31க்குள் முழுமையாக அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.