திமுகவை போல, எடப்பாடி பழனிசாமி அதிமுகவை, குடும்ப கட்சியாக மாற்ற முயற்சிக்கிறார் என கே.சி. பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திமுக அமைச்சரவை மாற்றம் அரசியல் ரீதியாக பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. முக்கியமாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். நடிகர் விஜய் அரசியலில் நுழைந்துள்ள நிலையில், அதற்காக தான் உதயநிதியை அவசர அவசரமாக, துணை முதல்வராக நியமித்துள்ளதாக தகவல் வெளியானது. இப்போதிருந்தே 2026 சட்டசபை தேர்தல் களம், விஜய் VS உதய் என்று தான் இருக்கும் என்று விவாதமும் நடக்கிறது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்பியும், அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவருமான கே.சி. பழனிசாமி தன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-
அரசியல் களத்தை 2018ல் இருந்து தற்போது வரை திமுக சித்தாந்த ரீதியில் இந்துத்துவாக்கும், திராவிடத்துக்குமானதாக முன்னெடுத்து வருகிறது. அதனால் அதிமுகவின் வெற்றி தோல்வி பாஜகவை மையமாக கொண்டு அமைந்தது. தற்போதைய அமைச்சரவை மாற்றம் சித்தாந்த அடிப்படையில் திமுக VS பாஜக என்று ஒரு புறமும், மறுபுறம் தனிப்பட்ட ஆளுமைகளாக உதயநிதி VS விஜய் என கட்டமைக்க முயற்சிக்கிறது. அதிலும் விஜய் பெறுகிற வாக்குகளில் சுமார் 65% அதிமுக வாக்குகளே. அதிமுகவை பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமியை தமிழக மக்கள் மற்றும் தொண்டர்கள் ஒரு ஆளுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதிமுக என்கிற கட்சியின் பலத்தையும், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் இரட்டை இலை சின்னம் இவற்றை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது எந்த சேதாரமும் இல்லாமல் எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா வளர்த்த, அதிமுக ஒற்றுமையோடு வலிமையோடு ஒன்றுபட்ட அதிமுகவாக பரிணமிக்க வேண்டும் என்பதுதான்.
திமுக இந்த அமைச்சரவை மாற்றத்தின் மூலமாக 2026 தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற திட்டத்தோடு தன்னை முழுமையாக முன்னிறுத்திக் கொண்டுள்ளது. இன்றைய சூழலில் ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தாலும் கூட கடுமையான திட்டமிடலும், உழைப்பும், பிரசார யுக்திகளும், கூட்டணி பலம் அமைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். வலிமையான ஒன்றுபட்ட அதிமுக கட்டமைக்கப்பட்டால் மட்டுமே மற்றவர்கள் அதிமுகவின் கூட்டணிக்கு வர விரும்புவார்கள். திமுக, பிரதமரளவில் பேச்சுவார்த்தை நடத்தி தன்னை தற்காத்துக் கொண்டது என்பது, ஸ்டாலினின் சமீபத்திய டெல்லி பயணம் உணர்த்துகிறது. ஆனால் தங்களை தற்காத்துக் கொள்ள திமுகவோடு மறைமுக ஒப்பந்த அரசியலை மேற்கொண்ட எடப்பாடியும் அவரது முன்னாள் அமைச்சர்களும் இன்றைக்கு திமுக வளையத்துக்குள் கட்டுண்டு கிடக்கிறார்கள். இதனால் அதிமுகவும் எழுச்சியின்றி காணப்படுகிறது.
ஒருவேளை எடப்பாடி, விஜய் போன்றவர்களை கூட்டணியில் சேர்த்து வெற்றி பெற்று விடலாம் என நினைத்தால் அது பலன் தராது. அது அதிமுகவுக்கும், திமுகவுக்குமான போட்டியாக இருக்காது. அது விஜய்க்கும், திமுகவுக்குமான போட்டியாக தான் அமையும். எம்ஜிஆர் கண்ட அதிமுக ஆயிரம் ஆண்டுகள் வலிமையோடு விளங்க வேண்டும், ஜெயலலிதா சட்டமன்றத்தில் சொன்னது போல 100 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக சட்டமன்றத்தில் விளங்க வேண்டும். 75 ஆண்டுகள் நிறைவு பெற்று ஆளுங்கட்சியாக பவள விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறது திமுக. ஆனால் பொன்விழா கண்ட அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகளால் அதிமுக தொண்டர்களும், விசுவாசிகளும், வாக்காளர்களும், வேதனையுற்று நிற்கிறார்கள். மிக மிக சாதாரண அரசியல் புரிதல் உள்ளவர்கள் கூட அதிமுக ஒன்று பட வேண்டும் என்று கருதுகின்றனர். அப்படி இருக்கம்போது, நான்காண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி இதை உணராமல் இருக்கிறார்.
திமுகவைப் போல, தான் ஆட்சிக்கு வர முடியாவிட்டாலும் தன் மகனை உருவாக்க வேண்டும் என்று அதிமுகவை குடும்ப கட்சியாக உருவாக்க முயற்சிக்கிறாரா. அல்லது அகம்பாவத்தின் வெளிப்பாடா. அதிமுக தொண்டர்கள் விழித்துக் கொண்டு எங்கள் ஒருங்கிணைப்பு முயற்சிக்கு மேலும் வலிமையான வெளிப்படையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.