திருமாவளவன் புழுக்கத்தில் தவித்து வருகிறார்: தமிழருவி மணியன்!

திருமாவளவன் திமுக கூட்டணிக்குள் இருக்கவும் முடியாமல் அதைவிட்டு வெளியேற வழியும் தெரியாமல் புழுக்கத்தில் தவித்து வருவதாக தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் தமிழருவி மணியனுக்குத் தனி இடம் இருக்கிறது. காமராஜர் காலத்திலிருந்து அரசியல் களத்தில் உள்ள அவர் தொடர்ந்து ஊழலை எதிர்த்துப் பேசிவருகிறார். அதன் ஒரு பகுதியாக இருக்கும் திமுக ஆட்சியை அகற்றியே தீருவேன் என்று சபதம் போட்டு அரசியல் செய்து வருகிறார். அவர் திடீரென்று அரசியல் களத்திற்கு வருவதும் பிறகு சலித்துப்போய் அரசியலை விட்டும் பொதுவாழ்வை விட்டும் விலகுகிறேன் என்று மாற்றி மாற்றிப் பேசியதால் சமூக வலைத்தள விமர்சகர்களால் அதிகம் விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டார். ரஜினியால் கைவிடப்பட்ட அவர் கடந்த தேர்தலில் பாஜகவையும் அண்ணாமலையையும் ஏற்றுக் கொண்டு மீண்டும் தேர்தல் அரசியல் களத்திற்கு வந்தார். இப்போதும் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறார். அந்தவகையில் இப்போது திமுகவுடன் கூட்டணியில் உள்ள விசிகவையும் விமர்சிக்க தொடங்கி இருக்கிறார்.

தமிழருவி மணியன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் திருமாவளவனின் அரசியல் கொள்கைகள் மீது பல விமர்சனங்களை வைத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

இந்த செந்தில் பாலாஜி என்பவர் யார்? அவர் எதற்காக சிறைக்குச் சென்றார்? அவர் ஜாமினில்தானே வெளியே வந்திருக்கிறார். இவர் நிரபராதி, ஒரு பாவமும் அறியாதவர் என்று சொல்லி செந்தில் பாலாஜியை உச்சநீதிமன்றம் வெளியே அனுப்பி இருக்கிறதா? ஒரு விசாரணை கைதியை நீண்ட நாட்களாக உள்ளே வைப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றுதானே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது?
கரூர் தேர்தல் களத்தில் நின்று கொண்டு செந்தில் பாலாஜி ஊழல்களை எல்லாம் பட்டியலிட்டுக் காட்டி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவரை நிச்சயம் சிறைக்கு அனுப்புவோம் என்று சூளுரை செய்தவர் ஸ்டாலின். இவர் வைத்த குற்றச்சாட்டினால்தான் செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்றார். 400 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் அவர் வெளியே வந்திருக்கிறார். இவர் என்ன தியாகத்தைச் செய்தார்? அவரை சட்டத்துறை அமைச்சரே பாராட்டி வரவேற்கிறார். இதை எல்லாம் பார்க்கும்போது இன்றைய அரசியல் எந்தளவுக்குச் சீரழிந்து போய்விட்டது என்பதைதான் பார்க்க முடிகிறது. இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. நாங்கள் மாற்று என சொல்லக் கூடிய பாஜகவிலும் இதே கலாச்சாரம்தான் இருக்கிறது.

திமுகவின் முக்கிய தலைவர்களின் ஒருவரான ஆர்.எஸ்.பாரதி, ஒரு பேட்டியில் அரசியல் என்பது தொழிலாக மாறிவிட்டது என்கிறார். இதைத் தொழிலாக மாற்றவில்லை இவர்கள் இழி தொழிலாக மாற்றிவிட்டார்கள் என்பதுதான் என் வேதனை. டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படுகின்ற மது பாட்டில்களில் 40% டி.ஆர்.பாலு மற்றும் ஜெகத்ரட்சகன் ஆலையிலிருந்துதான் கொள்முதல் செய்யப்படுகிறது என்கிறார்கள். இந்த இவரும் யார்? திமுகவின் பெரும்புள்ளிகள். ஜெகத்ரட்சகன் மீது ஈடி விசாரணை நடத்தில் 908கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அவரை அழைத்து ஸ்டாலின் பாராட்டி கலைஞர் விருது கொடுக்கிறார் ஸ்டாலின். அப்படி என்றால் உங்களுக்கு சமூக கூச்சம் இல்லை. தார்மீக அச்சம் இல்லை. மக்கள் பார்க்கிறார்களே என் பயம் இல்லை.

கொள்ளையடித்து சம்பாதித்து வைத்துள்ள பணத்தில் சிறு பகுதியைச் செலவிட்டு, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட முடியும் என்ற சூத்திரத்தை இவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதை மக்களும் ஏற்றுக் கொண்டு வாக்களித்து வெற்றி பெற வைக்கிறார்கள். இதுதான் மந்தை மனோபாவம். இதுதான் மிகப்பெரிய கொடுமை. காங்கிரஸ் கட்சியிலிருந்தவன் நான். எப்போதும் காங்கிரஸ் கட்சிக்குள் திமுக ஆதரவு என்ற மனநிலையில் சிலர் எப்போதும் இருப்பார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் காங்கிரஸ்காரனாக உள்ளவர்கள் குறைவு. அதே நோய் இப்போது விசிகவிற்குள் வந்துள்ளது. திருமாவளவனுக்குள் ஒரு புழுக்கம் இருக்கிறது. அவருக்கு உரிய மரியாதையை திமுக வழங்கவில்லை. கேட்கும் இடங்களை தரவில்லை. எனவே அவர் புழுக்கத்தில் இருக்கிறார். காயப்பட்ட மனநிலையில் திருமா இருந்தாலும் வெளியே எப்படி வருவது என்பது தெரியாமல் தவிக்கிறார்.

ஒரு வலிமையான கூட்டணியில் இருக்கிறார். இரண்டு முறை திருமாவும் ரவிக்குமாரும் திமுகவின் தயவில்தான் நாடாளுமன்றத்திற்குச் சென்றார்கள். 4 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். விசிகவுக்கு தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. விசாகவை போன்ற சிறிய கட்சிகள் பொருளாதார ரீதியில் வலிமையாக இல்லை. பெரிய கட்சியான திமுகவிடம் தான் எதிர்பார்க்க வேண்டி உள்ளது. எனவே நோட்டும் கிடைக்கிறது. சீட்டும் கிடைக்கிறது. அதற்காகப் பொறுமை காக்க வேண்டி இருக்கிறது. திமுகவினால் விசிகவுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன. அதைவிட்டு விட்டு அதிமுக பக்கம் போனால் வெற்றி பெறுவதற்கான உத்தரவாதம் இல்லை. அதிமுக மெல்ல மெல்லச் சரிந்து வருகிறது. அங்கே போனால் விசிக வெற்றி பெறவே முடியாது. அதற்காகத்தான் புழுங்கிக் கொண்டே திமுக கூட்டணியில் தொடர்கிறார்கள்.

இந்த ஆதவ் அர்ஜூனா யார்? மார்ட்டின் மருமகன் என்கிறார்கள். அவர் என்ன தொழில் செய்கிறார்? சட்டவிரோத லாட்டரி சீட்டு விற்கிறார். மதுவினால் மக்கள் அழிகிறார்கள் என்றால், லாட்டரி சீட்டினாலும் ஏழைகள் வாழ்வை இழப்பது உண்மைதானே? லாட்டரி சீட்டு விற்று ஒருவர் கோடி கோடியாகக் கொள்ளை அடித்து வைத்துள்ளார். அந்தப் பணத்தில் கொஞ்சம் கட்சிக்குச் செலவழிக்க மருமகன் தயாராக இருக்கிறார். அவர் பணத்தில்தானே மாநாடு நடந்தது? ஆக, திமுக மாதிரி சில கார்ப்பரேட்டுகளின் உதவி கட்சிக்குத் தேவை என்ற நிலைக்கு விசிகவும் வந்துவிட்டது. 1999இல் தான் தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். அதற்கு மூப்பனார் உதவினார். அன்று நான் கட்சியின் பொதுச்செயலாளர். அன்று தொட்டு திருமாவளவனை அறிவேன். அன்று அவரிடம் லட்சியம் இருந்தது. ஈழத்திற்காக மிகப்பெரிய போராட்டங்களைச் செய்தவர் அவர். அந்த திருமாவளவன் இன்று எங்கே போனார்? நான்கு எம்.எல்.ஏக்கள், 2 எம்பிகள் கொடுத்த பதவி சுகம் அவரை மாற்றி இருக்கிறது. அதைத் தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் என ஆசை அவரை ஆட்கொண்டிருக்கிறது. அவர் மாறிவிட்டார்.

இதைச் சொல்வதால், நான் திருமாவளவன் துணை முதல்வராக வருவதற்கு எதிராகப் பேசுகிறேன் என்று அர்த்தம் இல்லை. அவர் முதல்வராக வருவதைக் கூட நான் ஆதரிக்கிறேன். நான் காந்தியவாதி. நாடு விடுதலை பெற்றதும் முதல் குடியரசுத் தலைவராக ஒரு பட்டியலின பெண்மணியை நியமிக்க வேண்டும் என்றார். எனவே தலித் தலைவர் ஒருவர் முதல்வராக வருவதை நான் ஏற்கிறேன். அதைச் சொல்ல ஆதவ் அர்ஜூனா தேவை இல்லை. இவர் யார்? கடந்த ஆண்டு இவரை யாருக்காவது தெரியுமா? கோடி கோடியாகக் கொள்ளை அடித்து வைத்துள்ள ஒருவர் கட்சிக்கு வந்தால், உடனே ஆலவட்டம் அடித்து வரவேற்று கட்சியில் துணைப்பொதுச்செயலாளராக உட்காரவைத்து எப்படிச் சரியாகும்? ஆதவ் என்பவரை ஆதரித்துப் பேசும் திருமாவின் தலித் அரசியல் இன்று எங்கே போனது?. இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.