உதயநிதி துணை முதல்-அமைச்சரானதால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீராகிவிடுமா? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைடச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அமைச்சரவையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுத்துவிட்டால் மட்டும் போதாது. தென் மாவட்டங்களில் இன்றும் சாதிய கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும். வேங்கைவயல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத நிலைதான் இருக்கிறது. தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களும், கொடுமைகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே, தலித் மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதுதான் உண்மையான மாற்றமாக இருக்கும். ஆனால் அதை தி.மு.க. அரசு செய்யுமா? என்பது கேள்விக்குறிதான்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் ஆகிவிட்டதால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீராகிவிடுமா? மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு அவர் உத்தரவாதம் தருவாரா? விலைவாசியை குறைத்துவிடுவாரா? சொத்து வரியை குறைத்துவிடுவாரா? தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவாரா? தி.மு.க. ஆட்சியில் இருக்கும்வரை எந்த மாற்றமும் வரப்போவது இல்லை. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.